ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்குவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் - வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 28, 2023

ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்குவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் - வாசுதேவ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை சர்வாதிகாரமான முறையில் அடக்குவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்கு எதிரான தொழிற்சங்க போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இடதுசாரி ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தேசிய மக்கள் சக்தியினர் கடந்த 26 ஆம் திகதி கொழும்பில் நடத்திய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பொலிஸாரின் வன்முறையான செயற்பாட்டினால் ஒருவர் உயிரிழந்துள்ளார், இதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை சர்வாதிகாரமான முறையில் அடக்குவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

படலந்த சம்பவத்தை நாட்டு மக்கள் மறக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாது, ஆகவே அவரின் செயற்பாடுகளை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

பொருளாதார நெருக்கடியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் புதிய வரிக் கொள்கையை அமுல்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் ஏனைய சேவைக் கட்டமைப்பின் கட்டணங்களும் அதிகரிக்கப்படும்.

பொருளாதார மீட்சிக்காக கடுமையான தீர்மானங்களை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அரசாங்கத்தின் தீர்மானங்கள் நடுத்தர மக்களை பலி கொடுக்கும் வகையில் காணப்படுகிறது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுமா, இல்லையா என்ற நிலை காணப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை எந்தத் தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். நாட்டு மக்களின் தேர்தல் உரிமைக்காக இனி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment