வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரும் பிணையில் விடுவிப்பு : கல்வி அமைச்சிற்குள் நுழைய தடை செய்யுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 27, 2023

வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரும் பிணையில் விடுவிப்பு : கல்வி அமைச்சிற்குள் நுழைய தடை செய்யுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

றிஸ்வான் சேகு முஹைதீன்

கல்வி அமைச்சிற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக கைதான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிக்கு மாணவர்கள் 48 பேர் உள்ளிட்ட 62 பேரும், இன்று (27) பிற்பகல் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

இவர்கள் மீது பொதுச் சொத்துகளுக்குள் அத்துமீறி நுழைந்தமை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றசாட்டுகளை பொலிசார் பதிவு செய்திருந்தனர்.

ஆயினும் குறித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறியதன் விளைவாக அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

பிணை வழங்கிய பின்னர், வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவ செயற்பாட்டாளர்களை கல்வி அமைச்சிற்குள் நுழைவதை தடை செய்யும் பிணை நிபந்தனையை விதிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் கோரப்பட்ட போதிலும், பிரதிவாதகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு, இது அவர்களது அடிப்படை உரிமை எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

அதனைத் தொடர்ந்து, அரச அதிகாரிகளுக்கோ, அரச சொத்துகளுக்கோ இடையூறு இன்றி இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

மூடப்பட்ட பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தை திறக்குமாறு கோரி, கடந்த வியாழக்கிழமை (23) கல்வி அமைச்சு வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 48 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்று (27) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹோமாகம - பிட்டிபனவிலுள்ள இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படுவதாக, பல்கலையினன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர் நெலுவே சுமணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment