துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்கும்போது 13 ஐ ஏன் அமுல்ப்படுத்தக்கூடாது : சரித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 9, 2023

துறைமுக நகரத்தை சீனாவுக்கு வழங்கும்போது 13 ஐ ஏன் அமுல்ப்படுத்தக்கூடாது : சரித ஹேரத்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவிற்கு வழங்கும்போது 13 ஆவது திருத்தத்தை ஏன் அமுல்ப்படுத்தக்கூடாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. அதற்கான வழியை ஜனாதிபதியே காண்பித்துள்ளார். தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின் 13 ஆவது திருத்தத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை தவறாக பார்ப்பது நிராகரிக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசாங்க கொள்கை முன்வைப்பு தற்போது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக ஒரு விளம்பரமாக காணப்படுகிறது.

கடந்த காலங்களில் ஆணைக்குழு ஸ்தாபித்ததை போன்று தற்போது கொள்கைப் பிரகடனம் விளம்பரமாக காணப்படுகிறது. ஜனாதிபதியால் குறிப்பிடப்பட்ட கொள்கை உரையின் உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முடியாது.

ஜனாதிபதியின் கொள்கை உரையை ஆளும் தரப்பினர் புகழ்கிறார்கள். கடந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் முட்டாள்த்தனமாக முகாமைத்துவம் செய்தார் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இதனையே ஆளும் தரப்பினர் தற்போது புகழ்கிறார்கள்.

பிரபல்யமடையும் வகையில் எடுத்த தீர்மானங்கள் பொருளாதார பாதிப்புக்கு காரணம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலுக்கு வந்ததை போல் குறிப்பிடுகிறார்.

40 வருடங்களுக்கு மேல் ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டை ஆட்சி செய்தது. தற்போது பிறர் மீது ஜனாதிபதி பழி சுமத்தும் வகையில் உரையாற்றுகிறார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி முன்வைத்த ஒரு சில திட்டங்களை ஏற்றுக் கொள்கிறோம். சிறந்த விடயங்களை ஒருபோதும் மறுக்கப் போவதில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 13 ஆவது திருத்தம் தொடர்பான கருத்துக்களை ஜனாதிபதி சமூகமயப்படுத்தியுள்ளார். இனப் பிரச்சினைக்கும், இனங்களுக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணாமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

பல்லின கலாச்சாரத்தை ஒருமுகப்படுத்தியதால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றமைந்துள்ளது, ஆகவே 13 ஆவது திருத்தத்தையும் ஒருமுகப்படுத்தும் வகையில் செயற்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துடன் ஒனறிணைந்து பயணிக்க வேண்டும். அதற்கு 13 ஆவது திருத்தமே அடித்தளம். ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையில்லாத பிரச்சினையை தோற்றுவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில சிறந்த விடயங்களை முறையாக செயற்படுத்த வேண்டும். அதனை விடுத்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கக்கூடாது.

ஒப்பந்தம் கூடாக கொழும்பு துறைமு நகரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எவரும் அச்சமடையாதபோது 13 ஆவது திருத்தத்தின் சிறந்த விடயங்களை ஏன் முழுமையாக அமுல்படுத்தக்கூடாது, இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என்றார்.

No comments:

Post a Comment