(இராஜதுரை ஹஷான்)
மே 09 காலி முகத்திடல் வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தவறியுள்ளனர். போராட்டக்காரர்கள் அத்துமீறி செயற்படுவதற்கு பாதுகாப்பு தரப்பினர் இடமளித்துள்ளார்கள் எனவும் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
2022 மே மாதம் 09 ஆம் திகதி அலரி மாளிகையில் ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் ஆளும் தரப்பின் ஆதரவாளர்கள் அலரி மாளிகை முன்பாக அமைக்கப்பட்ட மைனா கோ கம மற்றும் காலி முகத்திடல் ஜனாதிபதி மாளிகை முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்டக்களங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாட்டில் அமைதியற்ற தன்மை நிலவியது, ஆளும் தரப்பினர் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட ஆளும் தரப்பின் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் காரியாலயங்கள் மீது தீ வைக்கப்பட்டு, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
மே 09 'கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம' போராட்டக்களத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராய அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தலைமையில் விசேட குழுவை நியமித்தார்.
வசந்த கரன்னாகொட தலைமையிலான குழுவினர் தமது விசாரணை அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த அறிக்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
அலரி மாளிகையில் ஒன்று கூடிய ஆளும் தரப்பினர் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் போராட்டக்களத்தை நோக்கி வருவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு தரப்பினருக்கு கடுமையாக கட்டளை பிறப்பித்தும் அவர்கள் பொறுப்புடன் செயற்படவில்லை.
குறுகிய நேரத்திற்குள் நாட்டின் பாதுகாப்பை பாதுகாப்பு தரப்பினர் பலவீனப்படுத்தியதாக ஆளும் தரப்பினரகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
மே 09 சம்பவம் தொடர்பில் நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே வசந்த கரன்னாகொட அறிக்கையை பாராளுமன்றத்திற்கு விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் ஆளும் தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள்.
No comments:
Post a Comment