இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் கூட்டம் : தொடர்கிறது சர்ச்சை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 1, 2023

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் கூட்டம் : தொடர்கிறது சர்ச்சை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளுடன் மட்டும்தான் இணைந்து போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்து, குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கே.வி.தவராசா, அவ்வாறு தீர்மானமாக எடுக்கவில்லை. அதுபற்றி கலந்துரையாடப்பட்டது என்று உடனடியாகவே பதிலுரைத்திருந்தார்.

இந்நிலையில், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா குறிப்பிடுகையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகளைத் தவிர (தமிழரசு, ரெலோ, புளொட்) வேறு கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டுக்குச் செல்வதில்லை என்று கட்சியின் அரசியல் குழுவில் முடிவு எதுவும் எடுக்கவில்லை. அந்தக் கூட்டத்தில் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது, இது தொடர்பில் மற்றக்கட்சிகளுடன் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து கருத்து பரிமாற்றங்கள் மாத்திரமே இடம்பெற்றன.

‘சூம்’ செயலி ஊடாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பங்கேற்றுவிட்டு இடைநடுவில் சென்றுவிட்டார்.

அவ்வாறான நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக ஆராயப்பட்டதையடுத்து எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் முடிவு எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் சம்பந்தமாக, செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் என்னை சந்தித்துப் பேசியுள்ளார்கள். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் என்னுடன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

விக்னேஸ்வரனின் யாழ். வீட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பின் போதும் தேர்தல் உடன்பாடு தொடர்பில் கவனம் செலுத்தினோம்.

எனினும், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்தான் தேர்தல் உடன்பாடு தொடர்பில் இறுதி முடிவு எடுப்போம் என்று மேற்படி மூன்று சந்திப்புக்களிலும் நான் திட்டவட்டமாகத் தெரிவித்தேன். இந்த விவகாரத்தை நாம் மிகவும் பக்குவமாகக் கையாள வேண்டும் என்று மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

இதேவேளை, மாவை.சேனதிராஜா கருத்து வெளியிட்டதை அடுத்து அக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில், அடுத்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிடுவதான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை உண்மைதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வந்தால் தமிழரசுக் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுவதா என்ற விடயம் ஆராயப்பட்டபோதே இந்த விடயமும் தீர்மானமாக கூறப்பட்டது. அதாவது தமிழ் அரசுக் கட்சி மட்டும் அல்ல தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளுடன் மட்டும் கூட்டுணைந்து போட்டியிடுவதாகவே தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தலைவர் மாவை.சேனாதிராஜாவுடன் நான், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சாணக்கியன் மற்றும் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா, திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாசன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகிய ஒன்பது பேர் பங்குகொண்ட கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றே கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாகவே இக்கருத்தை பொது வெளியில் கூற முன்பு கட்சியின் பதில் செயலாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஆகியோருடன் இதனை கூறுவதற்கான ஒப்புதலையும் பெற்றேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment