மட்டக்களப்பு மாவட்டத்தில் 180 பேர் தற்கொலை செய்துள்ளனர் - திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 1, 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் 180 பேர் தற்கொலை செய்துள்ளனர் - திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 180 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்திலும் நடைபெறாமை குறித்து உண்மையில் கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர், படித்தவர்கள், பாமரர்கள் என்று பல்வேறு மட்டங்களிலும் இன்று தற்கொலை கலாசாரங்கள் மேலோங்கியிருப்பது நமது மாவட்டத்துக்கு நல்லதொரு சகுணமல்ல என்றே தோன்றுகிறது.

ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து, அவனை அழுத்துவதால்தான் தற்கொலைக்கு தூண்டப்படுகிறான்.

தற்போது தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணங்களாக குடும்ப பிரச்சினை, காதல் பிரச்சினை, மன அழுத்தம், பரீட்சையில் தோல்வி, கணவன் - மனைவி முரண்பாடு, வறுமை, போதை மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமை என அடுக்கிக் கொண்டே போகலாம்.

சிறு சிறு காரணங்களுக்கு கூட மனமுடைந்து போய்விடுவதற்கான காரணங்களை கண்டறிய இயலாமல் தடுமாறுகிறோம்.

தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் எல்லோருக்கும் உடனே வருவதில்லை. பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பும்போது அரவணைக்க, தோள் கொடுக்கவென யாரும் இல்லாமல், தனிமையில் வாடும் சந்தர்ப்பத்தில் இம்மாதிரியான முடிவை நோக்கி பலர் செல்கின்றனர்.

உங்களிடம் யாராவது 'வாழ்க்கை போற போக்கை பார்த்தால் பேசாம செத்துடலாம் போல இருக்கு' என்று சொன்னால், அதன் பாரதூரம் அறியாமல் அவர்களை கடந்து செல்லாதீர்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தின் முதல் அறிகுறிதான்.

மனதில் ஏற்படும் விரக்தி, கோபம், இக்கால பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கையை பற்றிய பயம் என்பவையே அவர்களை இப்படி பேச வைக்கிறது.

சரி, உங்கள் நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ, ஏன், உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கலாம். இப்படி ஒரு முடிவெடுக்கப் போகிறார்கள் என தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

கண்டிப்பாக தடுக்கத்தான் முயற்சி செய்வோம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவோம். ஆறுதல் சொல்வோம். மனதை மாற்ற முயற்சி செய்வோம். இப்படி செய்வதன் மூலம் தற்கொலையை தடுக்க முயற்சிப்போம்.

நாளுக்குநாள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிற நிலையில், அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லையென்றால், மாவட்டத்தின் நிலைமை என்னாவது?

அரச, அரச சார்பற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளான நீங்கள், இது தொடர்பாக கலந்தாலோசித்து, தற்கொலை முயற்சியிலிருந்து மக்களை பாதுகாக்க வழிகோலுங்கள் என்றார்.

No comments:

Post a Comment