தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையாளர் நாயகம்

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நிதி ஒதுக்குவதில் நெருக்கடி உள்ளது என திறைசேரி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேர்தலை நடத்துவதற்கான நிதி 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி, உள்ளூராட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் சிக்கல் காணப்படுவதாக திறைச்சேரி அல்லது நிதி அமைச்சு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேவையான மானியத்தை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் ஏற்கனவே செலவு மதிப்பீட்டுக்கு அமைய உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம்.

2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் செலவுகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆகவே தேர்தலை நடத்த அரசாங்கம் நிதி வழங்க வேண்டும்.

வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னர் தேர்தலை பிற்போட முயற்சிக்கப்படுவதாக அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது, தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும், தேர்தலை நடத்த நிதி இல்லை. நாணயம் அச்சிட முடியாது, நாணயம் அச்சிட்டால் பண வீக்கம் தீவிரமடைந்து மீண்டும் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என ஆளும் தரப்பு குறிப்பிடுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான அரச செலவுகளுக்கு 7,900 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை செலவு செய்வதால் பொருளாதார நெருக்கடி ஒன்றும் தீவிரமடையாது. தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதை அறிந்தே அரசாங்கம் நிதி நெருக்கடியை குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகிறார்கள்.

தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொள்ள முடியாத அரசாங்கம் எவ்வாறு அடுத்த வருடம் அரச செலவுகளுக்கான பல்லாயிரம் பில்லியன் நிதியை திரட்டிக் கொள்ளும்,தேர்தலை நடத்த நிதி இல்லை என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் சூழ்ச்சி என மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வலியுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன், தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment