(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா பயிர்ச் செய்கையை செய்து பிள்ளைகளை வளர்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 410 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சுக்கு 232 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, யுத்தம் ஏதும் இல்லாத நிலையில் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் சொற்ப அளவு நிதிதான் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி விதிப்பினால் கொப்பி, பேனை, பென்சில் உட்பட பாடசாலை உபகரணங்களை வாங்க முடியாத நிலைக்கு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாடசாலை உபகரணங்களின் விலை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கல்வித்துறை தற்போது பொருளாதார பாதிப்பினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் 1,000 தேசிய பாடசாலைகளை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டது. தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கு 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
1 மில்லியன் தேசிய பாடசாலை என்ற பெயர்ப் பலகைக்கும், பிறிதொரு மில்லியன் பாடசாலை நுழைவாயில் நிர்மாணிப்புக்கும் வழங்ப்பட்டுள்ளது. ஏனைய தேவைகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை.
இதன்போது எழுந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். தேசிய பாடசாலைகளை உருவாக்கும் எண்ணக்கரு உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு பாரிய நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய துஷாரா இந்துனில் நீங்கள் என்ன குறிப்பிட்டாலும் 1,000 தேசிய பாடசாலை எண்ணக்கருவிற்கு 2 மில்லியன் ரூபா நிதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பெயர்ப்பலகை மற்றும் நுழைவாயிலை அமைத்து தேசிய பாடசாலைகளை உருவாக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
பாடசாலை மாணவர்களின் போசணை உணவுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். கல்விச் சேவையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர தீர்வு வழங்கப்படவில்லை.
ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் இல்லாத பிரச்சினை தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சாரி என்பது இலங்கையின் ஆடையல்ல இந்தியாவில் இருந்து சாரி கலாசாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆசிரியர் சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான ஆடை அணிய வேண்டும்.
உயர்தர மாணவர்களின் வருகை 80 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதை எற்றுக் கொள்கிறோம். பாடசாலை கல்வி முறைமையை காட்டிலும் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களின் வருகை உயர்வடைந்துள்ளமையின் காரணம் என்ன என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
பாடசாலை மாணவர்களின் மத்தியில் போதைப் பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. பாதுகாப்புத் தரப்பினரது ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்களை இலக்காக் கொண்ட போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞசாவை பயிர்ச் செய்கையை செய்து பிள்ளைகளை வளர்க்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment