(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது. கூட்டணியாக தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பில் பல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் மீது கொண்டுள்ள அச்சத்தின் காரணமாகவே அதனை பிற்போடுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. எனினும் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம்.
எனவே பல்வேறு கலந்துரையாடல்களின்போது தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்ததைப் போன்று உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணியமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே நாம் தேர்தலில் போட்டியிடுவோம். மக்களின் நிலைப்பாட்டினை தேர்தலின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். எனவே தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் மக்களை அதற்கு எதிராக ஒன்று திரட்டுவோம்.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியும் இழுபறி நிலையிலுள்ளது.
வரிகளை அதிகரிப்பதை தவிர அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. மின் கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக அவற்றின் பாவனையை மக்கள் குறைத்துக் கொண்டுள்ளனர். வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
தேர்தலை காலம் தாழ்த்தி நாட்டை அராஜக நிலைமைக்கு கொண்டு செல்வதை விட, மக்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு அவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment