வடக்கு, கிழக்கிலுள்ள சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது : மின்சார அமைச்சரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்கள் வெறுக்கத்தக்கது - எல்லே குணவங்ச தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

வடக்கு, கிழக்கிலுள்ள சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது : மின்சார அமைச்சரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்கள் வெறுக்கத்தக்கது - எல்லே குணவங்ச தேரர்

(இராஜதுரை ஹஷான்)

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அரசியல் பிரச்சினை உள்ளதே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது. நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கோட்டை - நாக விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகளை அடக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஒரு சில தரப்பினரது முறையற்ற செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த பௌத்த பிக்குகளையும் குறை கூற முடியாது.

புத்தசாசனத்தில் உரிய கோட்பாடுகள் உள்ளன. பௌத்த பிக்குகள் அந்த கோட்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். பிக்குளை அடக்கும் வகையில் சட்டங்களை இயற்றுவதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது, உதிரிபாகங்களை இணைத்த வாகனத்தை போல் இயங்கும் இந்த அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட முடியாது.

எனது விகாரையின் மாத மின் கட்டணம் 48 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மின் கட்டணம் அதிகம் என்பதற்காக புத்த பெருமானின் சிலையை இருளிலா வைப்பது.

மின்சார அமைச்சரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் வெறுக்கத்தக்கதாக காணப்படுவதுடன், மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இதற்கு மக்கள் பொறுப்புக்கூற வேண்டிய தேவை கிடையாது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை விடுத்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்கிறது. தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment