உத்தியோகபூர்வமாக வெளியாகிறது உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிப்பு ? - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

உத்தியோகபூர்வமாக வெளியாகிறது உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிப்பு ?

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 5ஆம் திகதி (வியாழக்கிழமை) வெளியிட உத்தேசித்துள்ளது.

இம்மாதத்தின் மூன்றாவது வார காலப்பகுதியில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. கலப்பு மற்றும் விகிதாசார முறைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது. இம்முறை இரண்டு இலட்சம் பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த வேண்டிய உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை முன்னாள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சின் விடயதான அதிகாரங்களுக்கு அமைய இவ்வருடம் மார்ச் மாதம் வரை பிற்போட்டார்.

அதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது, தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி உரித்தாக்கப்பட்டது. தேர்தலை நடத்துவதற்கான தொழில்நுட்ப மட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான கடமைகளுக்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த மாதம் (டிசெம்பர்) தேர்தல் மாவட்டங்களுக்கான தெரிவத்தாட்சி உறுப்பினர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி உறுப்பினர்களை ஆணைக்குழு நியமித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிட ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கபபட்டு 14 அல்லது 17 நாட்களுக்குள் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவிக்கப்பட வேண்டும். இதற்கமைய இம்மாதம் மூன்றாம் வார பகுதியில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டு, 5 அல்லது 7 வார காலத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு ரிட் மனுக்கல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment