உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குக் கிடைக்க வேண்டிய நிலுவை வரி, தண்டப்பணம், வட்டித் தொகை 773 பில்லியன் ரூபா : 2.4 பில்லியன் ரூபா பெறுமதியான 4831 காசோலைகள் நிராகரிப்பு - கோப குழுவில் புலப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 1, 2022

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்குக் கிடைக்க வேண்டிய நிலுவை வரி, தண்டப்பணம், வட்டித் தொகை 773 பில்லியன் ரூபா : 2.4 பில்லியன் ரூபா பெறுமதியான 4831 காசோலைகள் நிராகரிப்பு - கோப குழுவில் புலப்பட்டது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 யூன் 30ஆம் திகதி வரை கிடைக்க வேண்டிய நிலுவையான வரி, தண்டப்பணம் மற்றும் வட்டியின் பெறுமதி 773,957,856,618 ரூபா (ரூ.773 பில்லியன்) என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது.

இந்தத் தொகையில் 201,400,855,198 ரூபா (201 பில்லியன்) சட்ட ரீதியான சிக்கல்கள் இன்றி வசூலிக்கப்படக் கூடிய வருமானங்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், 572,557,001,420 ரூபா (572 பில்லியன்) ஒரு சில காரணங்களால் இவற்றை வசூலிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தொகையாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.

அத்துடன், RAMIS மற்றும் Legacy ஆகிய கட்டமைப்புக்கள் இரண்டின் கீழும் வசூலிக்கப்பட வேண்டிய நிலுவை வரித் தொகை அடையாளம் காணப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், வசூலிக்கப்படக் கூடிய வருமானத் தொகை எனப் பேணப்படும் 201 பில்லியன் ரூபா இன்னமும் வசூலிக்கப்படாமை தொடர்பிலும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

பகுதி பகுதியாக இந்தத் தொகையை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

வசூலிக்கப்பட வேண்டியுள்ள வருமானம் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலுவைத் தொகையை பகுதிகளாக அல்லது வசூலிக்கப்படும் முறை, அதற்கான திகதிகள் உள்ளடங்கிய தகவல்களுடன் கூடிய அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழுவின்) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் பணிப்புரை விடுத்தார்.

2021ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி கோபா குழுவினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் மற்றும் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள வரி இலக்கை அடைவதற்கு திணைக்களம் கொண்டிருக்கும் திறன் குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்தது.

கோபா குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தலைமையில் (28) நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்விடயங்கள் தெரியவந்தன.

2022ஆம் ஆண்டுக்கான வரி வருமானமாக 1852 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்தபோதும், 2023 வரவு செலவுத் திட்டத்தில் 3130 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் சுட்டிக்காட்டினார்.

பெருந்தொகையான வரி வருமானம் நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில், 2023 வரவு செலவுத் திட்டத்தில் வரி வருமானம் 69% இதனால் அதிகரிக்கப்பட்டிருப்பதால் இந்த இலக்கை அடைய முடியுமா என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் கிடைக்காவிட்டால், துண்டுவிழும் தொகை அதிகரித்து நாடு என்ற ரீதியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடையமுடியாது போய்விடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த வரிப் பணத்தை வசூலிப்பதற்கான முக்கிய காரணியாக RAMIS அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த RAMIS கட்டமைப்பை உருவாக்குவதற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், அப்படியிருந்தும் அது சரியான மட்டத்தில் இது இயங்கவில்லை எனவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

மேலும், இது இதற்கு முன்னர் பல தடவைகள் கோபா குழுவில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பான கொடுப்பனவுகள் குறித்த தகவல்களைத் தனக்கு வழங்கவில்லை எனவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

உடன்படிக்கையின் பிரகாரம் தகவல்களை வழங்குவது சாத்தியமில்லை எனவும் அது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கூறுவதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.

இவ்வாறு, RAMIS கட்டமைப்பில் கொள்முதல் உட்பட பல அம்சங்களில் சிக்கல்கள் இருப்பதால், நாட்டிற்கு ஏற்ற வகையில் இதனைச் செயற்படுத்துவது குறித்து திகதிகளுடன் ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க கோபா குழு பரிந்துரைத்தது.

அறிக்கை போதுமானதாக இல்லாவிட்டால், கொடுக்கல் வாங்கல் குறித்து கணக்காய்வு நடத்தப்படும் என்றும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன், 2022 யூன் 30ஆம் திகதி வரையில் 2,488,0036,615 ரூபா (2.4 பில்லியன்) பெறுமதியான 4831 காசோலைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட காசோலைகளில் 1,429,356,750 ரூபா பெறுமதியான 3817 காசோலைகள் 3 வருடங்களுக்கு மேற்பட்டவை என்பதும் இங்கு தெரியவந்தது.

இங்கு, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து குழு கேள்வி எழுப்பியதுடன், சட்ட நடவடிக்கை எடுக்க தமது திணைக்களத்திற்கு அதிகாரம் இல்லை என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஒரு குற்றவியல் குற்றமாகும் என்றும், இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து இது தொடர்பாக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாத காலத்துக்குள் கோபா குழுவிடம் அறிக்கை வழங்குமாறு கோபா குழுவின் தலைவர் சிபாரிசு செய்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன.த சில்வா, லசந்த அழகியவண்ண, காதர் மஸ்தான், கலாநிதி சுரேன் ராகவன், டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, அசோக் அபேசிங்க, வைத்திய கலாநிதி சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, மேஜர் பிரதீப் உந்துகொட, வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment