(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
ஆசிரிய சேவைக்கான சம்பள அதிகரிப்பை 2023 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்துவதாகவும் அரச சேவையாளர்களுக்கான 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. ஆனால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதிகள் உள்வாங்கப்படவில்லை. நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரச சேவையாளர்களுக்கு ஒரு சதம் கூட சம்பளம் அதிகரிக்காத வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் இடம்பெறுகிறது. நாட்டுக்காக சேவையாற்றிய ஓய்வூதியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.
அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித பிரச்சினைக்கும் தீர்வு முன்வைக்கப்படவில்லை. மாறாக புது பிரச்சினைகள் மாத்திரம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பிலும் பிரச்சினை காணப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அது 60 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டு தீர்மானங்களும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.
அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை கொள்கை ரீதியில் தீர்மானங்களையும் எடுக்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறோம். கொவீட் பெருந்தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அரச சேவையாளர்களுக்கு இதுவரை நிதியத்தின் ஊடான கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
அரச சேவையாளர்களுக்கு அரச மொழி கொள்கை கடந்த காலங்களில் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் தற்போது அரச சேவையாளர்கள் அரசகரும மொழிகளில் தேர்ச்சிப் பெற்றுக் கொள்வது வியாபாரமாக்கப்பட்டுள்ளது, ஆகவே அரச மொழிகள் திணைக்களத்தின் ஊடாக அரச சேவையாளர்களுக்கு மொழி தேர்ச்சிப் பாடநெறிகளை தொடர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பை 2023 ஆம் ஆண்டு முதல் அதிகரிப்பதாகவும், அரச சேவையாளர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை 2023 ஆம் ஆண்டு முதல் வழங்குவதாக குறிப்பிடப்பட்டது, ஆனால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதிகள் தொடர்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
அரச சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியமான எத்திட்டங்களும் உள்வாங்கப்படவில்லை, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள திட்டங்களை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment