எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் - அருந்திக பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் - அருந்திக பெர்னாண்டோ

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பலினால் சமுத்திர மற்றும் சூழல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு முழுமையான நட்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

7 பில்லியன் டொலர்களை நட்டஈடாக பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அது மூன்று பில்லியன் ரூபாவாக குறைவடையும் நிலை காணப்படுகிறது. ஆகவே பேச்சுவார்த்தைகளை விடுத்து வழக்கு தொடர்ந்து அதன் மூலம் முழுமையான தொகையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றுவதற்கு முன்னர் எம்.டி நியூ டயமன்ட் என்ற கப்பலும் இலங்கைக் கடற் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும் அந்த விடயம் சம்பந்தப்பட்ட அமைச்சு, அப்போதிருந்த அதிகாரிகள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், கடற்படைத் தளபதி ஆகியோர் சர்ச்சைக்குரிய அந்த கப்பல் மீண்டும் நாடு திரும்பவுதற்கு மீள இடளித்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதன் பின்னர் நீர்கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலான 65 கிலோ மீற்றர் கடற் பிரதேசத்தில் கடற்றொழிலை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேல் மாகாணத்துக்கு மாத்திரமல்லாது வடமேல் மாகாண மாவட்டமான புத்தளத்துக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் கம்பஹா மாவட்டத்தில் 11,091 குடும்பங்களும், கொழும்பு மாவட்டத்தில் 3250 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 701 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கடற்றொழில் அமைச்சால் அமைக்கப்பட்ட குழுவின் ஊடாக நட்டஈடு வழங்குவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் நாளாந்த வருமானம், மீன்பிடிக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த நட்டஈடு மதிப்பீடு செய்யப்பட்டது.

கம்பஹா மாவட்டத்துக்கு 348 மில்லியன்களும், கொழும்பு மாவட்டத்துக்கு 335 மில்லியன்களும் இழப்பீடாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக்கப்பலிடமிருந்து கிடைக்க வேண்டிய நட்டஈட்டை டொலர்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் நாடு நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுத்திருக்கும்போது இந்த நட்டஈட்டு தொகையை இலங்கை ரூபாவில் பெற்றுக் கொள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணங்கியுள்ளமை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

பாரியளவான நட்டஈட்டை அக்கப்பலிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கு இலங்கையில் முறையொன்று இல்லை என்பதால் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு மில்லியன் கணக்கான நிதி செலுத்தி பாதிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டன.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்டப் பாதிப்புகளின் மொத்த மதிப்பீடு கணக்கிடப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும் இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரையில் தயாரிக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment