மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டும், இன்றுவரை நலிவடைந்த சமூகமாக மலையக மக்கள் - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டும், இன்றுவரை நலிவடைந்த சமூகமாக மலையக மக்கள் - இராதாகிருஷ்ணன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இவ்வாறான நிலையில் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அனைவரும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றுக்கு மீள செல்ல வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் தொடர்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், பெருந்தோட்ட மக்களுக்கு தேவையான எந்தவிதமான முன்மொழிவுகளும் இல்லை என்பதற்கு கவலையை தெரிவிப்பதற்காக கறுப்பு ஆடையில் சபைக்கு வந்தேன் என வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மலையக மக்களின் அபிவிருத்திக்கென ஒரு சதம் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நாட்டுக்கு அதிகளவான அந்நியச் செலாவணியை மலையக மக்களே ஈட்டிக்கொடுக்கிறார்கள். ஆனாலும் இன்றுவரையில் நலிவடைந்த சமூகமாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பெருந்தோட்ட நிறுவனங்கள் பெரும் இலாபங்களை ஈட்டி வருகிறன.

1823ஆம் ஆண்டு கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகின்றன. ஆனாலும் வசதியற்ற மோசமான நிலையிலேயே மலையக மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்து லயத்திலேயே வாழும் நிலையே இருக்கின்றது. ஒரு இலசட்த்து 46 ஆயிரத்து 714 வீடுகள் மலையக மக்களுக்கு தேவை. இந்த வீட்டுத் தேவைகளை இலங்கை அரசாங்கத்தால் தனியாக பூர்த்தி செய்ய முடியாது. மாறாக வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றே இவற்றைப் பூர்த்தி செய்ய முடியும்.

குறிப்பாக இந்திய அரசாங்கம் 10 ஆயிரம் வீடுகளை வழங்கியிருக்கின்றபோதும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்னும் காணிகளை வழங்கவில்லை. இதுதான் இங்குள்ளப் பிரச்சினை.

வீடுகளை அமைத்துக் கொள்ள 7 பேச் காணி வழங்குவதாக கடந்த அரசாங்கம் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அந்த கம்பனிகள் வழங்கவில்லை. காணிகள் இல்லாது வீடுகளை எவ்வாறு நிர்மாணிப்பது? 37 ஆயிரத்துக்கும் அதிகமான மலசலகூடங்கள் தேவை. நுவரெலியா மாவட்டத்துக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான மலசலகூடங்கள் தேவை.

மேலும், மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும். தோட்டத்தில் ஒரு பிரச்சினை ஏற்படும்போது தோட்ட நிர்வாகத்தினருடனே பேசித் தீர்மானிக்க வேண்டும். இதனால் மலையக மக்கள் இன்னும் அடிமைகளாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையக பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று சம்பள பிரச்சினையை தீப்பதற்கு தொழிற் சங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு கூட்டு ஒப்பந்தத்தை மேலும் ஏற்படுத்த வேண்டும். அதனால் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும். மலையக மக்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வழி செய்ய வேண்டும். இந்நாட்டில் உள்ள ஒரு இனத்தை மாத்திரம் இவ்வாறு வைத்திருப்பது தவறு என்றார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் பயன்படுத்தாத இடங்களை அரசாங்கம் மீள பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்துக்கான வரைபு கிடைத்ததும் அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிபோம் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

No comments:

Post a Comment