பெருந்தோட்டங்களை மீண்டும் பொறுப்பேற்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

பெருந்தோட்டங்களை மீண்டும் பொறுப்பேற்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - வடிவேல் சுரேஷ்

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு மலையக மக்கள் காரணமல்ல. ஆனால் பொருளாதார பாதிப்பினால் எமது சமூகம்தான் தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெருந்தோட்ட தொழிற்துறையை நிலையாக பேணும் நோக்கம் தோட்ட கம்பனிகளுக்கு கிடையாது. ஆகவே பெருந்தோட்டங்களை மீண்டும் பொறுப்பேற்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 200 வருடகால வரலாற்று பின்னணியை கொண்டுள்ள மலையக மக்கள் இந்த நாட்டின் மூத்த சமூகமாக இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கு தமது உழைப்பை அர்ப்பணித்துள்ளார்கள். ஆகவே எமது மக்கள் கௌரவிக்கப்பட வேண்டும்.

பொருளாதார பாதிப்பு, நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு மலையக மக்கள் கடுகளவேனும் காரணமானவர்கள் அல்ல. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பினால் எமது உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் பெருந்தோட்டங்கள் உள்ளன. 1992 ஆம் ஆண்டு அரசாங்கம் 22 கம்பனிகளிடம் இந்த பெருந்தோட்டங்களை ஒப்படைத்தது. 1992 ஆம் ஆண்டு தோட்டங்களில் காணப்பட்ட பௌதீக மற்றும் மனித வளம் தற்போது அருகியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள பெருந்தோட்ட கம்பனிகளில் சுமார் 9 ஆயிரம் காணிகள் காடாக்கப்பட்டுள்ளன.

22 கம்பனிகள் என்பது உண்மையல்ல. 4 கம்பளிகள்தான் 22 பெருந்தோட்டங்களையும் நிருவகிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு கம்பனிகளுக்கு பெருந்தோட்டங்கள் கையளிக்கப்படும்போது 12 இலட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்தார்கள். ஆனால் தற்போது பெருந்தோட்டங்களில் 1 இலட்சத்து 43 ஆயிரத்து பேர் மாத்திரம்தான் தொழில் புரிகிறார்கள். மலையக பெருந்தோட்ட காணிகள் திட்டமிட்ட வகையில் காடாக்கப்பட்டு, காணிகள் துண்டாக்கப்படுகின்றன.

பெருந்தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்தினால் பிரதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வஞ்சிக்கப்படுகிறார்கள். எமது உறவுகளின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

நாட்டின் பொதுச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் தோட்ட கம்பனிகளினால் மலையக மக்கள் நெருக்கடிக்குள்ளாகுகிறார்கள் பெருந்தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்க அவதானம் செலுத்த வேண்டும். தோட்ட தொழிற்துறையை நிலையாக பேணும் நோக்கம் இந்த கம்பனிகளுக்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment