இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கான வேட்பு மனுக்கள் இதன் பின்னர் பத்திரிகை விளம்பரம் மூலம் கோரப்படவுள்ளதாக தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டு அமைச்சில் கடந்த வியாழக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது இலங்கையின் எந்த ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரருக்கும் தேர்வுக் குழுவுக்காக தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் பத்திரிகை விளம்பரத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு 10 வேட்பு மனுக்களை பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதில் மிகச் சிறந்த தகுதி பெற்ற குறைந்தது ஐந்து பெயர்களை தேர்வு செய்து கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்காக விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுடன் நியமிக்கப்படவுள்ளனர்.
கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு மிகத் தகுதி பெற்றவர்களை நியமிக்கும் முறைமை இந்த நடைமுறை மூலம் வெளிப்படுவதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் ருமேஷ் களுவிதாரண, ஹேமன்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு. கர்னைன் ஆகியோருடன் பெண் உறுப்பினரான நில்மினி குணரத்ன இடம்பெற்றுள்ளனர்.
புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்காக வேட்பு மனுக்கள் கோரப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அர்ஜுன ரணதுங்க மேலும் கருத்து வெளியிடுகையில், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தனுஷ்க குணதிலக்கவை விடுவிப்பதற்கு தேசிய விளையாட்டு சபையின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment