இந்திய - இலங்கை, ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.
இந்தியாவின் ‘வியோன்’ ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாதுள்ளது. 2018ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்ட மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. அந்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதற்கு சில சட்டத் தடைகள் இருப்பதால் அது நடைபெறவில்லை.
2018 இல் குறித்த சட்டத்தினை திருத்துவதற்கான வாக்கெடுப்பிற்கு அதிகாரங்களைப் பகிருமாறு கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களித்துள்ளது.
எவ்வாறாயினும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. அதன் பிரகாரம், அவர்களிடமுள்ள அதிகாரங்கள் அவர்களுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக கூறி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் போவை உள்ளிட்ட சர்வதேசத்தின் பல்வேறு பொது அரங்குகளில் இந்தியா தொடர்ச்சியாக வலியுத்தி வருகின்றமையை அவதானித்துள்ளோம் என்றார்.
இதேவேளை, சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கியுள்ளதா என்றும், எதிர்காலத்தில் சீனாவின் உளவுக் கப்பல்களுக்கு இலங்கை அனுமதி அளிக்குமா என்பது குறித்தும் வினவப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கியது என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. அது சில சக்திகளின் மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகவுள்ளது.
இலங்கை கடன்களைப் பெற்றுள்ளது. அதனை மீளச் செலுத்துவதில் தற்போதைய நெருக்கடிகள் சிக்கலான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், சீனாவுடன் வலுவான பொருளாதார உறவுகள் காணப்படுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையில் இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டுகள் கூட நிறைவுக்கு வந்துள்ளன. இதனைவிடவும், சீனா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு ஆயுத தளபாடங்களை வழங்கியிருக்கின்றது. ஆகவே கடன் விடயத்தில் இணக்கப்பாடுகளை எட்டவுள்ளோம்.
அதேநேரம், சீனாவின் கப்பல் இலங்கைக்கு வருகை தந்த விடயத்தில் இந்தியாவின் கரிசனைகள் எம்மிடத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த வகையில் அவற்றை நாம் கருத்திற் கொண்டுள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் வீணான பதற்றங்களை நாம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படுத்த விரும்பவில்லை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தினையே நாம் விரும்புகின்றோம் என்றார்.
தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் வினவப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்த அவர், இந்தியா, வாழ்வாதார மற்றும் கடன் தொகைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
வரலாற்றில் இந்தியா அயல் நாட்டுக்கு தொடர்ச்சியாக கைகொடுத்து வருகின்றது. அதேபோன்று சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுகளின்போதும் இந்தியா ஆதரவளித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா, சீனா, ஜப்பான், பாரீஸ் கழகம் உள்ளிட்டவற்றுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்து வந்திருந்தோம். தற்போது அந்தப் பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தினை அடைந்திருக்கின்றன. ஆகவே விரைவில் சதகமான அறிவிப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்கின்றோம்.
மேலும், இலங்கையின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகின்றது. தற்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலம் வரையில் செயற்படுவார்கள். அதற்கு முன்னதாக தேர்தல்களுக்குச் செல்லமாட்டார்கள் என்றார்.
No comments:
Post a Comment