கெப்பித்திகொல்லாவையில் அமைதியின்மை : காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலி, பிக்கு உள்ளிட்ட நால்வர் கைது ! - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

கெப்பித்திகொல்லாவையில் அமைதியின்மை : காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பலி, பிக்கு உள்ளிட்ட நால்வர் கைது !

அநுராதபுரம், ​கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த சென்ற பொலிஸார் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

நேற்றிரவு (31) கெப்பித்திகொல்லாவ, ரம்பகெபுவவெவ பிரதேசதத்தில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இவ்வாறு பிரதேசவாசிகள் அமைதியற்று செயற்பட்ட நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பகெபுவவெவ பிரதேசத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி, 4 அதிகாரிகளுடன் உரிய இடத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது அப்பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 150 பேர் குறித்த இடத்தில் ஒன்று திரண்டு கெப்பித்திகொல்லாவ - பதவிய பிரதான வீதியை மறித்து டயர்களை எரித்து வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களை நோக்கி சத்தமிட்டு அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கியதாகவும், இதன்போது பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்றபோது, ​​திரண்டிருந்த ஒரு கும்பல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் முன்னால் வந்து திட்டியதோடு, திடீரென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சரமாரியாகத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அங்கிருந்த பொலிஸ் சார்ஜெண்ட் அவர்களது தாக்குதலை தடுக்க முயற்சித்த நிலையில், குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து துப்பாக்கியை கைப்பற்றியுள்ளார். 

பின்னர், குறித்த நபர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எச்சரித்துக் கொண்டிருந்த வேளையில், குறித்த எச்சரிக்கையையும் மீறி மக்கள் அலட்சியமாக நடந்து கொண்டதன் காரணமாக நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்துள்ளனர்.

அப்போது, குறித்த இடத்தில் இருந்த பொலிஸ் சார்ஜெண்டை குறித்த கும்பலில் இருந்த சிலர் தாக்கியுள்ளதோடு, இதனால் குறித்த பொலிஸ் அதிகாரி தரையில் வீழ்ந்ததுடன் நிலைய பொறுப்திகாரி கூட்டத்தை இயன்றவரை விரட்டியடித்துள்ளதுடன் ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜெண்டை சிகிச்சைக்காக கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நிலைமை தீவிரமடைந்ததன் காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு வேளையில் வீதியை மறித்து கட்டுக்கடங்காமல் திரண்டிருந்த மக்களை கலைத்து நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

யானை தாக்கி உயிரிழந்த நபரின் சடலம் அதுவரை அருகில் இருந்த வயலில் கிடந்த நிலையில், சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் சடலத்தை கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு பிரதேசவாசிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் சார்ஜெண்ட் வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தவர் ரம்பகெபுவவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜெண்டின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜெண்ட் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ போதிருக்கராமய விகாரையைச் சேர்ந்த 29 வயதான தேரர் உள்ளிட்ட ரம்பகெபுவெவ பிரதேசத்தில் வசிக்கும் 20, 30, 37 வயதுடைய 4 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கெப்பித்திகொல்லாவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் கெபிதிகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment