(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. விவசாயத்துறையில் சேதனப்பசளைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியமை எமது அரசாங்கத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது என முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சி தெரிவித்தார்.
'ஒன்றிணைந்து எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் சனிக்கிழமை (8) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தூரநோக்கமற்ற வகையில் விவசாயத்துறையில் சேதனப்பசளைத் திட்டம் அமுல்படுத்தப்பட்டமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக அமைந்தது.
கட்சியின் தீர்மானத்துக்கமைய அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தாமலிருந்தது பாரிய குறைபாடாக கருதப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.
எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாதவர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தவுடன் அரசியல் அனுபவமற்றவர்கள் காணாமல் போனார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இளைஞர் விவகாரம், சமுர்த்தி உள்ளிட்ட பல அமைச்சு பதவிகளை வகித்தேன். அப்போது பலருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தேன், ஆனால் 2020ஆம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சு பதவியை வகித்த போது எவருக்கும் ஒரு தொழில் வாய்ப்பைக்கூட வழங்க முடியாமல் போனது.
பல விடயங்களை குறிப்பிட்டால் பலர் கவலையடைவார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் அரசியலை பலப்படுத்துவோம். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் கட்சியை மறுசீரமைத்து பலமான முறையில் தேர்தலை வெற்றி கொள்வோம் என்றார்.
No comments:
Post a Comment