(நா.தனுஜா)
இலங்கையில் சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 66,000 பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி பெருந்தோட்டப் பகுதியிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலுமே தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நிலை மிக உயர்வாகக் காணப்படுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உணவுப் பாதுகாப்பின்மை நிலைவரம் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் மோசமடையும் என்று எதிர்வு கூறியிருக்கும் அவ்வமைப்புக்கள், எனவே தீவிர உணவுப் பாதுகாப்பின்மையால் வெகுவாகப் பாதிப்படையக் கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கு அவசர உணவு உதவிகளை வழங்குவதும் வாழ்வாதார செயற்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தியுள்ளன.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் ஆகிய இரு சர்வதேச கட்டமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கையின் உணவுப் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் 58 பக்கங்களை உள்ளடக்கிய ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலை குறித்து அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு
இலங்கை முகங்கொடுத்திருக்கும் தீவிர பெரும்பாகப் பொருளாதார நெருக்கடியானது மருந்து, உணவு, விவசாயத்திற்கு அவசியமான பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதுடன் அவற்றின் விலைகளிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாய உற்பத்தியில் பாரிய தாக்கத்துடன் கூடியதாக பொருளாதார நடவடிக்கைகளில் ஸ்தம்பித நிலையைத் தோற்றுவித்துள்ளது.
அதேவேளை இறக்குமதி நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உணவுப் பாதுகாப்பின்மை நிலை படிப்படியாக உயர்வடைந்துள்ளது.
இரசாய உரம் மற்றும் கிருமிநாசினிகளின் பாவனை குறைக்கப்பட்டமையால் விவசாய உற்பத்திகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்ததுடன் கடந்த 5 ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில் சோள உற்பத்தியும் 40 சதவீத வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
அதேபோன்று இப்பெரும்பாகப் பொருளாதார சவால்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தேவைக்கேற்றவாறு இறக்குமதி செய்யமுடியாத உயர் அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளன.
மேலும் மரக்கறி, பழ வகை உற்பத்தி மற்றும் தேயிலை, இறப்பர், தெங்கு, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிப் பொருள் உற்பத்தி என்பன சராசரி அளவைவிடக் குறைந்தமையால் நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் கடந்த 2021 இன் இறுதிக் காலாண்டு முதல் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதுடன் அவை கடந்த ஜுலை மாதம் வெகுவாக அதிகரித்து, ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 90 சதவீதமாக உயர்வடைவதற்குக் காரணமாக அமைந்தன.
இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 66,000 பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டப் பகுதியிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலுமே தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நிலை மிக உயர்வாகக் காணப்படுகின்றது.
அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நாளொன்றில் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்தல், உணவு வேளைகளின் அளவைக் குறைத்தல், உணவைக் கொள்வனவு செய்வதற்காக சேமிப்பிலுள்ள பணத்தைப் பயன்படுத்தல், கடனுக்கு உணவைக் கொள்வனவு செய்தல் என்பன உள்ளடங்கலாக உணவு மற்றும் வாழ்வாதாரத்தேவைகள் சார்ந்த பல்வேறு மாற்று வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.
இந்த நிலைவரமானது இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே தீவிர உணவுப் பாதுகாப்பின்மையால் வெகுவாகப் பாதிப்படையக் கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கு அவசர உணவு உதவிகளை வழங்குவதும் வாழ்வாதார செயற்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் இன்றியமையாததாகும்.
அத்தோடு விவசாயிகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் ஊடாக விவசாயத்துறையை மீட்டெடுக்க முடியும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment