இரட்டை குடியுரிமை, பாராளுமன்றத்தை கலைக்கும் காலம் குறித்து திருத்தங்கள் இல்லை : 22 ற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பொதுஜன பெரமுன - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

இரட்டை குடியுரிமை, பாராளுமன்றத்தை கலைக்கும் காலம் குறித்து திருத்தங்கள் இல்லை : 22 ற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பொதுஜன பெரமுன

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை மற்றும் பாராளுமன்றத்தை கலைக்கும் காலம் உள்ளிட்ட விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்குமான தெளிவுபடுத்தல் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், சரத் வீரசேகர உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பின் வரிசை உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்ட மூலம் மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபில் இரட்டை குடியுரிமையை உடையவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகிக்க தகுதியற்றவர் எனவும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் இரண்டரை வருடத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசமாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும், பாராளுமன்றத்தின் பதவிக் காலம் நான்கரை வருடத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் உட்பட பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

இரட்டை குடியுரிமை விவகாரம் மற்றும் பாராளுமன்றத்தை கலைக்கும் காலம் உள்ளிட்ட விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளாத காரணத்தினால் பொதுஜன பெரமுன 22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் 22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு மீதான விவாதத்தை கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்ட போதும் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்துகொண்டு அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை தடுத்துள்ளார் என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் கடுமையாக சாடினார்கள்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்த சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment