(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும், கொழும்பு 7 ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வீட்டை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகம் ஊடாக இந்த கடிதம் அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி நள்ளிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்தலோக்க மாவத்தைக்கு முன்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்து அங்கு தங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசிக்கும் வீட்டை தனக்கு பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லம், புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ஹெக்டர் கொப்பேகடுவ இல்லத்தில் அவர் தங்கியுள்ளார்.
இந்நிலையில், மிக விரைவில் மஹிந்த ராஜபக்ஷ மீள விஜேராம இல்லத்துக்கு திரும்பவுள்ளார். அவ்வாறு அவர் திரும்பியதும், ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை வீட்டை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment