பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதாகவும் அவரை விமர்சித்தவர்களே தற்போது அவருடன் சேர்ந்து பயணிக்க முன் வந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.
பொறுப்பை பாரமெடுக்குமாறு தெரிவித்த போது அப்போதைய நெருக்கடிகளுக்கு பயந்து பின்வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர், தற்போது அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை அவரது இரட்டை வேடத்தையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 69 இலட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்ப்பாட்டத்தின் மூலம் பதவி விலக நேர்ந்தது.
50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரதமர் பதவியை பொறுப்பேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அந்த பொறுப்பை ஏற்கவில்லை. தற்போது அது தொடர்பில் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
எனினும் தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை பொறுப்பேற்றார். அதன் மூலம் நாட்டில் தற்போது சிறந்த பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
நான் ஆர்ப்பாட்டத்தை மதிக்கின்றேன். ஆனால் எல்லை மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
நெருக்கடியான அந்த சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் அந்த பொறுப்பை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் நாட்டுக்கு என்ன நடந்திருக்கும்?
எவரும் நாட்டைப் பொறுப்பேற்க முன் வராத நிலையில் அவர் தனிநபராக அதனை பாரமெடுத்தார். அவர் மீது நம்பிக்கை வைத்து பெரும்பான்மையானோர் அவருக்கு ஆதரவு வழங்கினர்.
கட்சி பேதமின்றி அவருக்கு ஆதரவு வழங்கப்பட்டது. நாட்டு மக்களும் அவர் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டனர். நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பொருத்தமான தலைவராக அவரை மக்கள் குறிப்பிட்டனர்.
சர்வ கட்சி அரசாங்கத்திற்கு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் எந்த கட்சிக்கும் அதற்கான தேவை இருக்கவில்லை.
மேலும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்னோக்கி செல்வார். விமர்சனங்களை முன் வைத்தவர்களும் இப்போது அவரோடு முன் செல்வதை காண முடிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment