கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரம் வரை நேற்று முன்தினம் முதல் சேவையை ஆரம்பிக்கவிருந்த சொகுசு ரயில் தாமதமானதற்கான பின்னணியில் சதி முயற்சிகள் இருந்துள்ளதா என ஆராய்வதற்காக குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அநுராதபுரத்திற்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதி கருதி ஆரம்பிக்கப்பட்ட மேற்படி சொகுசு ரயில் தாமதமானதன் காரணம் தொடர்பில் தற்போது அமைச்சு மட்டத்தில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்படி ரயில் அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் நேற்று முன்தினம் 08ஆம் திகதி காலை 9.20 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அமைச்சர் வருகை தந்த பின்னரும் 30 நிமிடங்கள் குறித்த ரயில் குறிப்பிட்ட பிரயாண மேடைக்கு வந்திருக்கவில்லை.
அமைச்சரின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிற்கிணங்க பேலியகொடை பாலத்திற்கருகில் சமிக்ஞை கேபிள் வெட்டப்பட்டிருந்ததால் சமிக்ஞை தாமதமாகி ரயில் வருகை தருவதற்கு தாமதமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
வேறு முறைமையொன்றை உபயோகித்து சமிக்ஞை வழங்கப்பட்டதையடுத்து மேற்படி ரயில் அநுராதபுரத்தை நோக்கி சென்றிருந்தாலும் மீண்டும் தம்புத்தேகம செனரத்கம பிரதேசத்தில் உத்தரதேவி ரயில் தடம்புரண்டதால் அதற்கப்பால் ரயில் பயணிக்க முடியாத நிலை காணப்பட்டது.
இறுதியில் பஸ் வண்டிகள் மூலம் ரயில் பயணிகளை அநுராதபுரம் வரை அழைத்துச் செல்வதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
காலை 9.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட ரயில் பிற்பகல் 1.42 மணிக்கு அநுராதபுரத்திற்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த வெள்ளோட்ட ரயில் சேவை மாலை 6.30 மணி வரை தாமதமாகியுள்ளது.
இதன் பின்னணியில் சதி நடவடிக்கைகள் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அமைச்சரின் பணிப்புரைக்கமைய உள்ளக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.
ரயில்வே திணைக்களத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்ல ஓடிசி மற்றும் கென்டி ஓடிசி சொகுசு ரயில் சேவைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவரும் நிலையில் அநுராதபுரம் ரயில் சேவைக்கு ஏற்படுத்தப்பட்ட தடை திட்டமிட்ட குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சதியா என்பதை ஆராயும் வகையிலேயே அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி இன்று குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்தில் அது தொடர்பில் முறைப்பாடொன்றை முன்வைக்கவுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment