அரசாங்கம் தேசிய, சர்வதேச மட்டங்களில் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் : ஜனாதிபதி புதிதாக தெரிவுக் குழுவை ஸ்தாபிக்க வேண்டிய தேவை கிடையாது - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

அரசாங்கம் தேசிய, சர்வதேச மட்டங்களில் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் : ஜனாதிபதி புதிதாக தெரிவுக் குழுவை ஸ்தாபிக்க வேண்டிய தேவை கிடையாது - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றாவிடின் அரசாங்கம் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சிலர் இன்றும் அரசியல் ரீதியில் சுய சிந்தனையில்லாமல் இருப்பது கவலைக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் ஜனாதிபதி புதிதாக தெரிவுக் குழுவை ஸ்தாபிக்க வேண்டிய தேவை கிடையாது. தேர்தல் முறைமை தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அறிக்கையை அமுல்படுத்துவது சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் புதிதாக தெரிவுக் குழுவை அமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் புதிதாக தெரிவுக் குழுவை அமைக்க வேண்டிய தேவை கிடையாது, ஏனெனில் பிரதமர் தினேஷ் குணவர்தன தேர்தல் முறைமை தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளார். புதிதாக தெரிவுக் குழு அமைப்பது என குறிப்பிடுகின்றமை காலத்தை வீணடிக்கும் ஒரு செயற்பாடாகும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லும் அதிகாரம் ஜனாதிபதி வசமாகும். ஜனாதிபதி அந்த அதிகாரத்தை முறையாக பயன்படுத்தலாம். தேர்தல் முறைமை தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அறிக்கை ஏற்றுக் கொள்ள கூடியது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளது திட்டமிட்ட வகையில் தடுக்கப்படுகிறது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் குறைபாடுகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக திருத்தம் செய்யப்படும் என வாக்குறுதி வழங்கிய காரணத்தினால் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது தற்போது கானல் நீராக உள்ளது. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதம் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்த வரைபுக்கமைய 22ஆவது திருத்த வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கமைய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றாவிடின் அரசாங்கம் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் மோசமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். சர்வதேச சமூகம் அரசியல் திருத்தம் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது.

22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர். இவர்கள் அரசியல் ரீதியில் தற்போதும் சுய சிந்தனையில்லாமல் இருப்பது கவலைக்குரியது. பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை யாப்புக்கு முரணாக செயற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment