ஈழத்தமிழர் விடயத்தில் கமல்ஹாசன் அக்கறை; ஆபத்தான தருணங்களில் இலங்கைக்கு உதவும் இந்தியா - மக்கள் நீதி மைய தமிழ் நாடு மாநில செயலாளர் யாழில் பெருமிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

ஈழத்தமிழர் விடயத்தில் கமல்ஹாசன் அக்கறை; ஆபத்தான தருணங்களில் இலங்கைக்கு உதவும் இந்தியா - மக்கள் நீதி மைய தமிழ் நாடு மாநில செயலாளர் யாழில் பெருமிதம்

இலங்கைக்கு ஆபத்தான தருணங்களில் உதவுவதற்கு இந்தியாவை விட நல்ல நண்பன் கிடையாதென நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் தமிழ் நாடு மாநில செயலாளர் சட்டத்தரணி லயன் சிறிதர் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானதும் ஆழமானதுமாகும். எமது கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகும் ஒருவராக காணப்படுவதுடன் எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் உறவுகளை சந்தித்து கலந்துரையாடுவது அவரது பழக்கம்.

நான் ஆறு வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் வந்துள்ளதால் பாரிய மாற்றத்தை காண்பதோடு சென்னையை ஒப்பிடும்போது யாழ்ப்பாணம் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

கோவிட்19 தாக்கத்துக்கு பின்னர் இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் யாழ்ப்பாணம் மக்களின் வாழ்வியலை நான் உள் நுழைந்து பார்க்கவில்லை.

இலங்கையில் மக்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்பதற்காக தமிழ்நாட்டு அரசின் உதவிகள் மத்திய அரசின் ஊடாக இலங்கைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி ஒரு சில வருடங்களில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அயல் நாடான இந்தியா தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கும்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பை தாண்டும்போது கைது செய்யப்படுவதும் அதேபோல் இலங்கை மீனவர்கள் இந்தியா கடற்பரப்பைத் தாண்டும்போது கைது செய்வதும் வழமையாக காணப்படுகின்றது.

இரு நாடுகளும் நல்ல நண்பர்கள் ஆகையால் எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை விடுத்து நல்லெண்ண அடிப்படையில் அணுக வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம்.

தமிழக அகதி முகாம்களில் இலங்கையிலிருந்து வந்த ஈழத்தமிழ் மக்கள் துன்பப்படுவதாக தமிழக முதல்வருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, முதல்வர் 350 கோடி ரூபாவை அவர்களது நலத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளார். 

எமது கட்சியினுடைய தலைவர் கமல்ஹாசன் ஈழத்தமிழர்களுக்காக அவர்களுடைய போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து குரல் கொடுத்து வருகின்றார்.

குறிப்பாக அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் நிகழும் போது கறுப்புச்சட்டை அணிந்து போராட்ட களத்திலே எதிர்ப்புகளில் ஈடுபட்டவர். 

ஆகவே தமிழக மக்களின் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழ் மக்கள் எங்கெல்லாம் துன்பப்படுகின்றார்களோ அவர்களுக்காக மக்கள் நீதி மையம் தொடர்ந்தும் குரல் கொடுக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment