அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும் : பிற்போடும் நோக்கம் கிடையாது என்கிறது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும் : பிற்போடும் நோக்கம் கிடையாது என்கிறது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் மாகாண சபைத் தேர்தல் முறைமையில் உள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் நடத்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பி. பதிரன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் கடந்த செம்டெம்பர் மாதம் முதல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்தல்களை பிற்போடும் நோக்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடையாது.

2023ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தலை பிற்போடுவதற்கு சாத்தியமான காரணிகள் ஏதும் கிடையாது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை கவலைக்குரியது. மாகாண சபை பழைய தேர்தல் முறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் பொது கொள்கையின் கீழ் ஒரு இணக்கப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை சகல அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளோம்.

பாராளுமன்றத் தேர்தலுக்கும், மாகாண சபைத் தேர்தலுக்கும் தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறை ஆகியன பற்றிய பொதுமக்களின் நம்பகத்தன்மை பெருமளவுக்கு சிதைவடைந்துள்ளது.

இந்த தேர்தல் முறைமையினால் தேர்தல் செலவு அதிகமாக உள்ளதாகவும், குறிப்பிடப்படுகிறது. கலப்பு விகிசாதார பிரதிநிதித்துவ முறை மிக சிறந்த தேர்தல் முறை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் பரிந்துரைத்தது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த பாராளுமன்றமே சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment