இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 700,733 கடவுச்சீட்டுக்களை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாகவே 3 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரை 409,919 ஆண்களுக்கும் 290,814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அதிகளவு எண்ணிக்கையிலான 115,286 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டைப் பெறுவதற்காக திணைக்களத்திற்குச் செல்லும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2021 இல் 392,032 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்தாண்டு 240,000 க்கும் அதிகமான நபர்கள் வெளிநாடுகளில் பணிபுரிய பதிவு செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை வரை 241,034 நபர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலதிகமாக ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகளை வழங்குவதற்கு சர்வதேச பங்காளிகளுடன் அமைச்சு செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment