மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் நிவாரணம் : கைவிடப்பட்டது எதிர்ப்பு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் நிவாரணம் : கைவிடப்பட்டது எதிர்ப்பு நடவடிக்கை

(எம். மனோசித்ரா)

நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அறிவிப்பினையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (9) மத வழிபாட்டுத் தலங்களில் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்படும் மத வழிபாட்டுத் தலங்கள் பிரத்தியேகப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒகஸ்ட் 10ஆம் திகதி முதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணம் அலகொன்றுக்கு 32 ரூபாவாக காணப்பட்டது.

அதற்கமைய சமீபத்திய மின் கட்டண திருத்தத்தைத் தொடர்ந்து, மாதத்துக்கு 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மத ஸ்தலங்களுக்கு அலகொன்றுக்கு 65 ரூபா அறவிடப்பட்டது. இந்த கட்டணத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சகல மத வழிபாட்டுத் தலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின் விளக்குகளை அணைத்து, மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதாக மதத் தலைவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றையதினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரால் மகா சங்கத்தினருக்கு எழுத்து மூலம் மத வழிபாட்டுத் ஸ்தலங்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து எதிர்ப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment