(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருடன் வருகிற செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் ஈடுபட முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கிய முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்துகொண்டு அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவது கவலைக்குரியது.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடையேற்படுத்த வேண்டும் என்ற யோசனையை பிரதானமாக முன்வைத்தோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த யோசனையை பிரதானமாக முன்னிலைப்படுத்தின.
'இரட்டை குடியுரிமையினை உடையவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகிக்க தகுதியற்றவர்' என குறிப்பிடப்பட்டு அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
22ஆம் திருத்தச் சட்ட மூல வரைபு மீதான விவாதத்தை கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஆளும் தரப்பினர் தடையேற்படுத்தியதால் விவாதம் பிற்போடப்பட்டது.
இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தகுதியற்றவர் என்ற ஏற்பாட்டை திருத்தியமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் உட்பட ஒரு சிலர் ஏழு அறிவுடையவரின் வழிகாட்டலுக்கமைய குறிப்பிட்டுள்ளதால் 22ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருடன் வருகிற செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.
இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் ஈடுபட முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment