யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும் : பொதுஜன பெரமுனவை கடுமையாக சாடிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும் : பொதுஜன பெரமுனவை கடுமையாக சாடிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

(எம்.மனோசித்ரா)

பொதுஜன பெரமுனவால் மீண்டும் எவ்வாறு மீண்டெழ முடியும்? வீதியில் செல்லும் யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும். அது எமக்கொரு பிரச்சினையல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஓரளவு சுமூகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவரது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமிருந்து பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புக்களின் வருடாந்த மாநாடு 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வரவு செலவு திட்டத்தை பார்க்காமல் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிட முடியாது. வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் அறிந்து கொண்டதன் பின்னரே அது வெற்றியடையுமா அல்லது தோல்வியடையுமா என்று கூற முடியும்.

தற்போதைய வரி அறவீடுகள் மக்கள் தாங்கிக் கொள்ளக் கூடியவாறானவை அல்ல. எனவே அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

அரசாங்கம் செல்லும் பாதை தொடர்பில் மக்களுக்கு திருப்தியில்லை. எனவே நாமும் மக்கள் சார்பிலேயே செயற்படுவோம்.

அடுத்த வருடம் தேர்தல் இடம்பெறும் என்று கூறுகின்றனர். ஆனால் எந்தத் தேர்தல் என்று எமக்குத் தெரியாது? எந்த தேர்தலானாலும் நாம் கூட்டணியாக போட்டியிடுவோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நாட்டில் சற்று சுமூகமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றார். ஆனால் அவருக்கு பொதுஜன பெரமுனவிடமிருந்து பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவே தோன்றுகிறது.

பொதுஜன பெரமுன மீண்டும் மீண்டெழ முயற்சிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அக்கட்சியால் எவ்வாறு மீண்டெழ முடியும்? எந்தவொரு நபருக்கும் மேடைகளில் ஏற முடியும். வீதியிலுள்ள யாசகர்களுக்கு கூட மேடைகளை அமைத்து அவற்றில் ஏற முடியும். எனவே அது ஒரு பிரச்சினையல்ல என்றார்.

No comments:

Post a Comment