பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ரணிலின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் - குமார வெல்கம - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ரணிலின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் - குமார வெல்கம

(எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த வருடம் வரவு செலவு திட்டத்தில் நாட்டை அபிவிருத்தி செய்து இளைஞர்களை வலுவூட்டும் திட்டங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என நவ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் வரவு செலவு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்ந்து அவர் மேலும் தெரிவிக்கையில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் விரக்தியடைந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இளைஞர்கள் எங்களிடம் வந்து, எந்த தொழிலாக இருந்தாலும் பராவாயில்லை, எப்படியாவது எங்களை வெளிநாடு செல்வதற்கு உதவுமாறு கேட்கின்றனர். இந்த நாட்டில் வாழ முடியாது என தெரிவிக்கின்றனர். அதனால் இளைஞர்கள் நாட்டை விட்டு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இளைஞர்களை வலுவூட்டும் வகையிலும் நாட்டை அபிவிருத்தி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை கொண்டுவந்தால், நாங்கள் பொது எதிரணியாக ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து அரசாங்கத்தை வீழ்த்துவோம்.

மேலும் 2015ஆம் ஆண்டில் இருந்து நான் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் 2015 இல் இருந்து 2022 வரை அமைக்கப்பட்ட அனைத்து அரசாங்கங்களில் இருந்தும் எனக்கு அமைச்சுப் பதவி ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வந்தது.

ஆனால் எதனையும் நான் ஏற்றுக் கொள்ள வில்லை. ஏனெனில் நான் கொள்கையுடன் அரசியல் செய்பவன். பிழையான கொள்கையில் அரசாங்கம் செய்பவர்களுடன் இணைந்து எமக்கு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

No comments:

Post a Comment