(நா.தனுஜா)
தலைநகர் கொழும்பிலுள்ள பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் அடக்குமுறைகள், நாட்டில் மனித உரிமை மீறல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த வலுவானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்பதையே காண்பிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு, எனவே இலங்கை மக்கள் தமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இயலுமான அனைத்து வழிகளிலும் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அது குறித்து தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தலைநகர் கொழும்பிலுள்ள பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
அவ்வழிகாட்டல்கள் வெளியிடப்பட்ட தினத்திற்கு மறுதினம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவ செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தப்பட்டதுடன், 84 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி கடந்த 23 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் ஊடாக, அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் நபர்களைக் கைது செய்வதில் பொலிஸாருக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன் அவ்வாறு கைது செய்யப்படுவோருக்குப் பிணையளிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய விரிவானதும் தீவிரமானதுமான மட்டுப்பாடுகள் மிகையான அளவிலான பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய தமது உரிமைகளை அனுபவிக்கும் மக்கள் நீண்ட காலம் வலுகட்டாயமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்படல் ஆகிய அச்சுறுத்தல்களைத் தோற்றுவித்துள்ளது.
கொழும்பில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை மட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் விதிக்கப்பட்டிருக்கும் புதிய வழிகாட்டல்கள், மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உச்சகட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முயற்சியாகும்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மக்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை அரசாங்கம் மேலும் இலகுபடுத்த வேண்டுமே தவிர, கருத்துக்களை வெளியிடுபவர்களை சிறையில் அடைக்கக்கூடாது.
அதேவேளை கடந்த 24 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் புதிதாக அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் ஒன்றில் நடைபெறாத போதிலும், அப்போராட்டம் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக ஏற்பாடு செய்யப்பட்டமையினாலேயே கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றை நடாத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் ஓர் பங்காளி என்ற ரீதியில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதுடன் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கின்றது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின்படி இந்த உரிமைகள் மீது விதிக்கப்படும் எந்தவொரு மட்டுப்பாடும் சட்டத்திற்கு அமைவானதாகவும், அரசாங்கத்தின் சட்டபூர்வ இலக்கை அடைந்து கொள்வதற்கு ஏதுவான வகையிலும் அமைய வேண்டும்.
இருப்பினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்கள் மனித உரிமைகள்சார் சட்ட நியமங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை.
இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகள்சார் கரிசனைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தொடர்ச்சியாக மீறி வந்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த வலுவானதொரு தீர்மானம் அவசியம் என்பதையே காண்பிக்கின்றது.
இலங்கை மக்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், உரியவாறான மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றுமே அமைதியான முறையில் வலியுறுத்துகின்றார்கள்.
எனவே இலங்கை மக்கள் தமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இயலுமான அனைத்து வழிகளிலும் உதவவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment