(எம்.ஆர்.எம்.வசீம்)
மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டு வளங்களை பாதுகாக்கும் நோக்கிலேயே உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அத்துடன் உயர் பாதுகாப்பு வலய பிரகடனம் மூலம் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் மகரகம தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சுகத் ஜயசுந்தர தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் நாட்டை நிர்வகிப்பதுடன் மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுப்பது அதன் பொறுப்பாகும்.
அதன் பிரகாரம் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரச வளங்களை பாதுகாக்கும் பாெருட்டே உயர் பாதுகாப்பு வலயங்கள் என சில முக்கியமான இடங்கள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கி்ன்றார்.
என்றாலும் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவது, மக்கள் நடமாடுவது, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது போன்ற விடயங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பிலும் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் மேற்கொண்டிருக்கும் இணக்கப்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அது தொடர்பாகவும் ஆராய்ந்து உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய முடியும் என ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் இருப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படும் வகையில் எந்த தடைகளும் அங்கு இடம்பெறுவதில்லை.
சில சந்தர்ப்பங்களில் அந்த இடங்களில் போராட்டங்கள் இடம்பெறும்போது, அங்கு சேவை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
அதேபோன்று மக்கள் போராட்டம் இடம்பெறுவதன் மூலம் அரச தொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதும் பட்சத்தில் அதனை தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
கடந்த அரசாங்கம் அரச சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு தவறியதனாலே ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற இடங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இந்த நிலைமைக்கு இடமளிக்க முடியாது.
எனவே நாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற இடங்கள் இருக்க வேண்டும். அது மக்களினதும் நாட்டினதும் பாதுகாப்புக்கு அவசியமாகும்.
என்றாலும் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வரும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து குறித்த வர்த்தமானி அறிவிப்பை மீள் பரிசீலனை செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்றார்.
No comments:
Post a Comment