முழு நாட்டையும் அதி உயர் வலயமாக பிரகடனப்படுத்தினாலும் மக்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்பதை அரச தலைவர் விளங்கிக் கொள்ள வேண்டும் - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 28, 2022

முழு நாட்டையும் அதி உயர் வலயமாக பிரகடனப்படுத்தினாலும் மக்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்பதை அரச தலைவர் விளங்கிக் கொள்ள வேண்டும் - விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தினாலும் மக்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை, மாறாக வெளிநாட்டு உல்லாச சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எரிபொருள் விநியோக கட்டமைப்பில் இரண்டாம் கட்டமாக நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகிய சேவை கட்டமைப்பில் ஏற்பட்ட நெருக்கடியினால்தான் கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3ஆம் மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது, இது எந்தளவுக்கு உண்மை என நம்பிக்கை கொள்ள முடியாது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டால், நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் தீவிரமடையும்.

ரஸ்யாவிடமிருந்து எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என பலமுறை குறிப்பிட்டுள்ள போதும் அரசாங்கம் அது குறித்து அவதானம் செலுத்தாமல் தன்னிச்சையாக செயற்படுகிறது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை இக்குறுகிய காலத்தில் பலமுறை குறைவடைந்த போதும் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை.

ரஸ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமெரிக்காவுடன் நட்புறவுடன் செயற்படுவதற்காக அரசாங்கம் ரஸ்யாவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை தவிர்த்துள்ளது. இதன் பாதிப்பை நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை, மக்கள் போராட்டம் தீவிரமடையும் என்ற அச்சத்தில்தான் ஜனாதிபதி கொழும்பு நகரை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

முழு நாட்டையும் அதி உயர் வலயமாக பிரகடனப்படுத்தினாலும் மக்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்பதை அரச தலைவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் ஜனாதிபதி வெளிநாட்டு உல்லாச சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்கின்றமை முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment