(எம்.ஆர்.எம்.வசீம்)
அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வரத்தமானி அறிவிப்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. அதனால் ஜனாதிபதி நாடு திரும்பியதும் வர்த்தாமானி அறிவிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பார் என ஜனாதிபதியின் தொழில் பணிப்பாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தாெடர்ந்து தெரிவிக்கையில், அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. அரச ரகசியங்கள் சட்டத்தின் கீழே இந்த வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு விடுக்கும்போது ஒரு பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த முடியாது. அது தவறு. நிறுவனங்களை இந்த சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த முடியும்.
குறிப்பாக ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பாதுகாப்பு அமைச்சு என ஒரு இடத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி இருந்தால் அது சரி. என்றாலும் தற்போது ஒரு பிரதேசத்தை குறிப்பிட்டே உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு வர்த்தமானி வெளியிடுவதாக இருந்தால் அவசரகாலச் சட்டத்தின் கீழே மேற்கொள்ள முடியும். அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி, இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அப்போது இது சட்ட ரீதியிலானதாகும்.
ஆனால் நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லை. அதனால் அதி உயர் பாதுகாப்பு தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பில் தவறு இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம். அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனவே ஜனாதிபதி தற்போது நாட்டில் இல்லை, நாடு திரும்பியதும் அதி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக மீள் பரிசீலனை மேற்கொள்வார். அல்லது வர்த்தமானி அறிவிப்பில் இருக்கும் பிழைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பார் என்றார்.
No comments:
Post a Comment