(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த பொதுஜன பெரமுனவினர் அவதானம் செலுத்தியுள்ளனர். அரசியல் இலாபத்துக்காக பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தாமல் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் வெகுவிரைவில் மக்கள் போராட்டம் தீவிரமடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசாங்கத்திற்கு உள்ளக மற்றும் வெளியக பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் அரசாங்கம் கூடிய அவதானம் செலுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
நாட்டில் மந்தபோசணை பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் மந்தபோசணை பிரச்சினை இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்கிறது.
உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது என்பதை அரசாங்கம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.
பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் குறிப்பிட வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும், நன்மதிப்பும் கிடையாது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றமை முற்றிலும் தவறானதாகும்.
மக்களின் அபிலாசைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படாவிடின் நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் தீவிரமடையும்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவியில் இருந்து விலக்கி புதிய பிரதரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளது.
அரசியல் இலாபத்துக்காக பதவிகளில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிப்பதை விடுத்து மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment