சமூகத் தலைவர்கள், தனவந்தர்கள், மஸ்ஜித் மற்றும் அரபு மத்ரஸாக்களின் நிர்வாகிகளின் கவனத்திற்கு! - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

சமூகத் தலைவர்கள், தனவந்தர்கள், மஸ்ஜித் மற்றும் அரபு மத்ரஸாக்களின் நிர்வாகிகளின் கவனத்திற்கு!

அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பண வீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. அத்தியவசியப் பொருட்களின் விலை உட்பட நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கங்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ளன.

இக்கட்டான இக்காலகட்டத்தில் மார்க்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆலிம்கள், மஸ்ஜித்களில் கடமை புரிகின்ற இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்கள், அரபு மத்ரஸாக்களின் உஸ்தாத்மார்கள் போன்ற பெரும்பாலானவர்களின் மாதாந்தக் கொடுப்பனவுகள் தற்காலத்தின் செலவீனங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இருக்கின்றதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

எமது ஈருலகவாழ்வின் ஈடேற்றத்திற்கான பயணத்தின் வழிகாட்டிகளாக இருக்கும் இமாம்கள், உஸ்தாத்மார்கள் ஆகியோர்களது உள்ளங்களை சந்தோசப்படுத்துவது சமூகத்திலுள்ள பொறுப்புதாரிகளின் கடமையாகும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியுமான வகையில் தற்காலத்திற்குப் பொருத்தமான அமைப்பில் அவர்களது மாதாந்த கொடுப்பனவுகள் அமைவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வரவேற்கின்றது.

எனவே மஸ்ஜித் மற்றும் அரபு மத்ரஸாக்களின் நிர்வாகிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது. அத்தோடு இவ்விடயத்தில் அந்தந்த ஊர்களிலுள்ள நலன்விரும்பிகள், தனவந்தர்கள் தம்மால் முடியுமான ஒத்துழைப்புகளை நிர்வாகிகளுக்கு வழங்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கின்றது.

அல்லாஹுதஆலா அல்குர்;ஆனில் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதனால் கிடைக்கும் பிரதிபலன்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (سورة البقرة 02 آية 261)

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தை செலவு செய்பவர்களுக்கு உவமையாவது, ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமானவன் (கொடையுடையவன்). யாவற்றையும் நன்கறிபவன். (அத்தியாயம் 02, வசனம் 261)

ஸதகாக்கள், தர்மங்கள் விடயத்தில் கூறப்பட்டுள்ள அனைத்துவிதமான நன்மைகளையும், நற்பாக்கியங்களையும் நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள வல்லவன் அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!

No comments:

Post a Comment