நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான அறிவியல் பங்களிப்பை வழங்குவது முஸ்லிம் புத்திஜீவிகளின் பொறுப்பாகும் - பேராசிரியர் மஸாஹிர் - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான அறிவியல் பங்களிப்பை வழங்குவது முஸ்லிம் புத்திஜீவிகளின் பொறுப்பாகும் - பேராசிரியர் மஸாஹிர்

நூருல் ஹுதா உமர்

தற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து உலகம் சிறிது சிறிதாக மீட்சியடைந்து கொண்டுவரும் இந்நிலையில் இப்பொருளாதார நெருக்கடியானது மேலும் பல நெருக்கடி மிக்க நிலமைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. பெருந்தொற்றினால் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள உலகப் பொருளாதாரமானது பல அதிர்ச்சியான தாக்குதல்களால் மேலும் பலவீனப்பட்டு வருகின்றது

என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் கடந்த 28.09.2022 அன்று நடாத்திய 9ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்பார்த்ததை விட உலகளவில் உருவாகியுள்ள உயர் பணவீக்கம், உக்ரைன் போர், உணவு மற்றும் பண்டங்களின் விலையேற்றம், நிலவியல் சார்ந்த அரசியல், நிச்சமற்ற பொருளாதார நிலமைகள், வறுமை மற்றும் பட்டினி ஆபத்து போன்றன இதற்கான அடிப்படைக் காரணிகளாக அடையாளப்படுத்தலாம். இந்தக் காரணிகள் உலகப் பொருளாதாரத்தை வெறும் 3.1 வீத வளர்ச்சியை மாத்திரம் 2022 மற்றும் 2023 காலப்பகுதியில் எட்டலாம் என மீள் கணிப்புக்குள்ளாக்கியுள்ளன. இது 2022 ஜனவரியில் எதிர்வு கூறப்பட்டதிலிருந்து முறையே 0.9 மற்றும் 0.4 வீதம் குறைவானதாகும்.

இதேவேளை எமது தாய்நாடான இலங்கைத் திருநாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த போது ஆசியாவில் பலம்வாய்ந்த பொருளாதார மையங்களுள் ஒன்றாக அது இருந்தது. ஆனால் அதன் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையையே கடந்து வந்துள்ளது.

இலங்கையில் காணப்படுகின்ற தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலைமை, பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ள திறமையற்ற முகாமைத்துவம், ஊழல், தூரநோக்கற்ற கொள்கையாக்கம், நல்லாட்சிக்கான மூலக்கூறுகளை இழந்தமை போன்றனவற்றின் விளைவாகும்.

இலங்கை மத்திய வங்கியில் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் பற்றாக்குறை மற்றும் சர்வதேச மூலதனச் சந்தையில் நுழைய முடியாது போனமை என்பன வரலாற்றில் என்றுமே காணாத கடன் சுமைக்கு வழிவகுத்துள்ளது. சரியாக முகாமைப்படுத்தப்படாத கடன்கள், வரிவிலக்கு என்பன வரவுசெலவுத்திட்டத்தில் இருக்கின்ற துண்டுவிழும் தொகையை மேலும் விரிவுபடுத்தியுள்ளன. இரசாயன உர இறக்குமதித் தடை மற்றும் திடீரென இலங்கை ரூபாவை மிதக்கவிட்டமை போன்றன இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாயின.

இந்நாட்டின் பிரதான வருமான மூலங்களான உல்லாசப் பயணத்துறையும் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும் அண்மைக்காலமாக 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், அவற்றைத் தொடர்ந்து 2020இல் ஏற்பட்ட கோவிட்-19 போன்ற உள்ளக மற்றும் வெளியகக் காரணங்களினால் பாதிப்படைந்துள்ளன. தற்போது இந்தப் பொருளாதார நெருக்கடி ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்றவற்றில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அடிப்படையில் குறிப்பாக முஸ்லிம் கல்விமான்கள் பொதுவாக முஸ்லிம் சமூகம் இந்த இக்கட்டான நிலையின் போது அவர்களின் பொறுப்பு அல்லது பங்களிப்பு என்ன? இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான அறிவியல் பங்களிப்பை வழங்குவது முஸ்லிம் புத்திஜீவிகளின் அடிப்படைப் பொறுப்பாகும்.

இதனடிப்படையில் முஸ்லிம் அறிஞர்களும் ஆய்வாளர்களும் இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான மாற்று வழிகளை முன்வைக்கலாம். அவர்கள் பொருளாதாரம் ஒரு சிலரிடம் மாத்திரம் சுழன்று கொண்டிருக்காமல் நீதியான முறையில் மக்கள் மத்தியில் அதனைச் சுழற்சிக்குட்படுத்துவதற்கான வழிமுறைகளை கருத்துரைக்கலாம். வட்டியற்ற வங்கி முறை பற்றிய ஆழமான மற்றும் விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். சமூகத்தில் வலுவிழந்துள்ளவர்களை வலுவூட்டி, அவர்களை பொருளாதார ரீதியாக மேன்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான வழிமுறையாக 'ஸகாத்தை' அறிமுகப்படுத்தலாம்.

சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் வள உற்பத்தியை மேற்கொண்டு, அதனை எவ்வாறு உச்ச பயனுள்ளதாக அமைக்க முடியும் என விதைந்துரைக்கலாம். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் அறபிகள் மற்றும் முஸ்லிம் உல்லாசப்பயணிகளை கவர்வதற்கான வழிமுறைகளைக் காட்டிக் கொடுக்கலாம்.

இஸ்லாத்தின் பொருளாதார ஆக்க சாதனங்களான ஸகாத், ஸதகா, வக்ஃப், வஸிய்யா, ஹிபா மற்றும் வராஸா என்பவற்றை உச்சபயன்பாடு தரத்தக்க வகையில் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment