(எம்.எப்.எம்.பஸீர்)
அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொராகொல்ல - மருதானை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த செவ்விளநீர் வியாபாரி, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் பலர் தொடர்புபட்ட போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பிலான முக்கிய வழக்கின் பிரதான சாட்சியாளர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கும் அந்த போதைப் பொருள் வழக்குக்கும் இடையே ஏதும் தொடர்புகள் உள்ளதா என தற்போது களுத்துறை குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை (3) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோர் நடாத்திய அந்த துப்பாக்கிச் சூட்டில் பேருவளை பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அவர் வீடு வீடாக சென்று செவ்விளநீர் சேகரிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். அவ்வாறு தனக்கு சொந்தமான சிறிய ரக லொறியில் நேற்று காலை இளநீர் சேகரிக்கும் போது, இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
அருகே இருந்த சி.சி.ரி.வி. காணொளிகளை பரீட்சித்துள்ள போதும் பொலிசாருக்கு கொலையாளிகள் குறித்து இன்று (4) நண்பகல் வரை தகவல்கள் கிடைத்திருக்கவில்லை.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கே மீள் விற்பனை செய்தமை தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அது குறித்த விசாரணைகளில், தெற்கு கடற்பரப்பில் படகுகள் ஊடாக கொண்டுவரப்படும் போதைப் பொருளில் ஒரு தொகை போதைப் பொருள் வர்த்தகர்களுக்கே மீள விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறித்து தெரியவந்திருந்தது.
இது குறித்து சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில்,போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
அது குறித்த வழக்கின் முக்கிய சாட்சியாளரே அளுத்கமவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழைவாயில் அருகே, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணிமனை தெரியும் தூரத்தில், கடந்த மே 30 ஆம் திகதி முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றொரு முன்னாள் இரானுவ வீரர் காயமடைந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடானது, அளுத்கமவில் நேற்று (3) கொல்லப்பட்ட நபரின் உறவினர் ஒருவரை இலக்கு வைத்தது எனவும், வழக்கொன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் ஆள் அடையாளம் மாறியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர்கள், புறக்கோட்டையிலிருந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக சென்று லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாக மருதானை நோக்கி சென்று தப்பிச் சென்றுள்ளமையும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் போலியானது எனவும் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி.யின் திட்டமிட்ட குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவு வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
இந்நிலையிலேயே தற்போது பிறிதொரு கோணத்தில் எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
No comments:
Post a Comment