காரில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 4, 2022

காரில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என முறைப்பாடு

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மே 28ஆம் திகதியன்று காரில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஜூன் 3ஆம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள ஊடகங்களுக்கு காவல்துறை தகவல் அளித்தது.

ஐந்து பேர் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் மூன்று பேர் மைனர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

"18 வயதுக்கு மேற்பட்டோரில் 18 வயதான ஒருவர் காவல்துறையினரால் நேற்று (03-06-2022) கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் இரண்டு சிறார்கள் ஜுப்ளி ஹில்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதுவரை குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் சிறார்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு நபரும் இரண்டு சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சிறார் ஒருவரையும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன," என்று ஹைதராபாத் காவல்துறையின் மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் ஜோயல் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

48 மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியும் என காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்காலிக பதிவு எண்ணைக் கொண்ட ஒரு டொயோட்டா இன்னோவா காரில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வாகனம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சிறுமியின் வாக்குமூலம் மற்றும் முதல் கட்ட தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடிபோதையில் இருக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பப்பில் நடந்த பார்ட்டி

ஜூப்ளி ஹில்ஸில் உள்ள 'அம்னீஷியா அண்ட் இன்சோம்னியா' என்ற பப்புக்கு மே 28ஆம் திகதியன்று தனது நண்பர்கள் இருவர் நடத்திய விருந்தில் கலந்து கொள்வதற்காக சிறுமி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அந்த பார்ட்டியில் மதுபானம் பரிமாறப்படவில்லை என்றும் பார்ட்டி நடந்த க்ளப் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

மாலை 5:30 மணியளவில், சிறுமியும் குற்றம் சாட்டப்பட்ட குழுவினரும் பப்பில் இருந்து வெளியேறினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முன்வந்தனர். அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு காரில் பேக்கரிக்குச் சென்றுள்ளார். பிறகு, அவரை காரில் ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று வாகனத்திற்குள் வைத்து அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது எப்படி?

காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மே 31ஆம் திகதியன்று இரவு ஜுப்ளி ஹில்ஸ் காவல்துறையை அணுகி சிறுமி வன்கொடுமைக்கு உள்ளானதாகப் புகார் அளித்தார். மேலும், அவர் அதிர்ச்சியிலும் மேற்கொண்டு எந்த விவரங்களையும் கூற முடியாத நிலையிலும் இருப்பதாக அவர் கூறினார்.

ஐபிசி 354, 323 மற்றும் போக்சோ சட்டத்தின் 9, 10ஆம் பிரிவுகளின் கீழ் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

ஐபிசியின் பிரிவு 354, ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் குற்றங்களுக்கானது. மேலும், பாதிக்கப்பட்டவர் 17 வயது மட்டுமே ஆன மைனர் பெண் என்பதால், போக்சோ சட்டப் பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்டது. பெண் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய 'பரோசா' உதவி மையத்திற்கு சிறுமியை காவல்துறையினர் அனுப்பினர்.

ஹைதராபாத் மேற்கு மண்டலத்தின் காவல் இணை ஆணையர் ஜோயல் டேவிஸ், "உதவி மையத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் ஒருவரின் பெயரை மட்டுமே அவரால் நினைவுகூர முடிந்தது," என்று கூறினார்.

இந்த தகவல் மற்றும் கைபேசி அழைப்புகளின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தது, சிசிடிவி காணொளி பதிவுகள் ஆகியவற்றின் மூலம் மற்ற நான்கு பேரையும் காவல்துறை அடையாளம் கண்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை மாற்றி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஐபிசியின் 376D பிரிவையும், பிற போக்சோ பிரிவுகளையும் சேர்த்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என புகார்

ஜூன் 3 மதியம் உள்ளூர் ஊடகங்களில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து நிறைய ஊகங்கள் எழுந்தன.

எதிர்க்கட்சியான பாஜக, காவல்துறை மற்றும் மாநில அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியதால், இது அரசியல் சர்ச்சையைக் கிளப்பியது.

மேலும், குற்றவாளிகள் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர்கள் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தக் காரணத்தால் இந்தப் பிரச்சினை ஓரம் கட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலியின் பேரனும் ஏஐஎம்ஐஎம்-இன் சட்ட மன்ற உறுப்பினரின் மகனும், வக்பு வாரியத் தலைவரின் மகனும் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

அவர்களைக் கைது செய்யக் கோரி ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காவல் இணை ஆணையர் ஜோயல் டேவிஸ், உள்துறை அமைச்சரின் பேரனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையென்று கூறினார்.

ஏஐஎம்ஐஎம் சட்டமன்ற உறுப்பினருடைய மகனின் பங்கு குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகக் கூறினார் அவர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விஐபியின் மகன் என்பதை அவர் ஒப்புக் கொண்டவர், குற்றம் சாட்டப்பட்டவர் 18 வயதுக்கும் கீழே உள்ளவர் என்பதைக் காரணம் காட்டி, எந்த விவரங்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

டி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவரும் தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான கே.டி.ராமராவ், குற்றவாளிகள் மீது உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"ஹைதராபாத்தில் மைனர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். உடனடியாக, கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட எவரையும், அவர்களின் நிலை அல்லது தொடர்புகளைப் பொருட்படுத்தி, விட்டுவிடாதீர்கள்," என்று ஜூன் 3ஆம் திகதி இரவு கே.டி.ராமராவ் ட்வீட் செய்துள்ளார்.

தெலங்கானா உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி கே.டி.ராமராவின் ட்வீட்டுக்குப் பதிலளித்துள்ளார்.

அதில், இது கோரமான சம்பவம். இதன் பின்னணியில் இருக்கும் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஹைதராபாத் காவல்துறை தெலங்கானா டிஜிபி, ஹைதராபாத் காவல்துறை கமிஷனர் ஆகியோருக்கு, ஏற்கெனவே தேவையான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு கூறப்பட்டுள்ளது என்று அவர் தமது பதிலில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment