இலங்கைக்கு 3.3 தொன் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கியது இந்தியா - News View

About Us

About Us

Breaking

Saturday, June 4, 2022

இலங்கைக்கு 3.3 தொன் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கியது இந்தியா

(நா.தனுஜா)

இந்திய அரசாங்கத்தினால் 1990 'சுவசரிய' அம்பியூலன்ஸ் சேவைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 3.3 தொன் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் நேற்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் 'சுவசரிய' பவுண்டேஷனின் தலைவர் துமிந்த ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த மார்ச் மாதம் கொழும்பிலுள்ள 'சுவசரிய' தலைமைக் காரியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, அவர்கள் மருந்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுத்திருப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அதற்கான உடனடி நடவடிக்கையாக இலங்கைக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைப்பதற்கு கரியல் என்ற இந்தியக் கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

அக்கப்பல் ஊடாக 'சுவசரிய' பவுண்டேஷனுக்குரிய மருத்துவ உபகரணங்களுக்கு மேலதிகமாக அம்பாந்தோட்டை தேசிய வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

'சுவசரிய' அம்பியூலன்ஸ் சேவையானது நாட்டின் 25 மாவட்டங்களிலும் இயங்குவதுடன், இது மக்களை மையப்படுத்தி இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்கி வருகின்றமைக்குச் சிறந்த உதாரணமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த அம்பியூன்ஸ் சேவையானது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுமார் 22 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் மூலம் கட்டமைக்கப்பட்டது. இது உயிர்களைப் பாதுகாப்பதில் முக்கிய வகிபாகத்தை கொண்டிருக்கின்றது.

இந்தியாவினால் கடந்த இரு மாத காலத்தில் சுமார் 370 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 25 தொன்களை விடவும் அதிகமான மருத்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment