உரியவாறான வழிகாட்டல்கள், உதவிகள் மூலம் தற்போதைய உணவுப் பொருள் நெருக்கடியிலிருந்து மீள முடியும் - இலங்கைக்கான பிரதிநிதி நம்பிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

உரியவாறான வழிகாட்டல்கள், உதவிகள் மூலம் தற்போதைய உணவுப் பொருள் நெருக்கடியிலிருந்து மீள முடியும் - இலங்கைக்கான பிரதிநிதி நம்பிக்கை

(நா.தனுஜா)

உரியவாறான வழிகாட்டல், உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கட்டமைப்புக்களின் உதவிகள் ஆகியவற்றின் மூலம் இலங்கை விவசாயிகளால் தற்போதைய உணவுப் பொருள் நெருக்கடியிலிருந்து மீட்சியடைய முடியும் என்று உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி விமலேந்திர ஷரன் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி உணவுப் பொருள் நெருக்கடி காரணமாகப் புதிய வாய்ப்புக்கள் எழுச்சியடைந்திருக்கும் நிலையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உள்நாட்டு உணவுக் கட்டமைப்பை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்காக அவ்வாய்ப்புக்களை இலங்கை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெருமளவான சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டிருப்பதுடன், பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் தோற்றம் பெற்றுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்நிலைவரம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய தேவைப்பாடுகளை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படும் அதேவேளை, உரியவாறான உணவுற்பத்தி இடம்பெறுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான உரம் மற்றும் பயிர் விதைகளைத் தருவித்தக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விமலேந்திர ஷரன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment