தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட மக்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுகின்றன : பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்துகிறார் வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Friday, June 3, 2022

தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட மக்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுகின்றன : பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறு வலியுறுத்துகிறார் வடிவேல் சுரேஷ்

(எம்.மனோசித்ரா)

அரசியல் நெருக்கடிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட மக்களின் இருப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே தற்போதுள்ள தொழில் அமைச்சர், தொழில் ஆணையாளர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பெருந்தோட்டத் தொழிற்துறையை பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்று மலையக மக்கள் தொழிற்சங்க அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கடந்த ஒரு வருடமும் 4 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு பெருந்தோட்டக் கம்பனிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இவ்வறான நிலையில் பெருந்தோட்ட கட்டமைப்பு கம்பனிகளால் அத்துமீறப்பட்டுள்ளன. இதனால் பெருந்தோட்டத் தொழிற்துறைக்கும் ஆபத்து நேர்ந்துள்ளது.

அரசியல் நெருக்கடிகளை தமக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டுள்ள கம்பனிகள் பெருந்தோட்ட மக்களின் இருப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சிறிய விடயங்களுக்கும் வழக்கு தொடர்ந்து தொழிற்சங்க பிரச்சினைகளை பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தீர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 30 ஆம் திகதி வழங்கப்படவுள்ள தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும், நடைமுறையில் சாத்தியப்படக் கூடிய வகையில் ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில் அமைச்சர், தொழில் ஆணையாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தையும் அழைத்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான வாழ்க்கைச் செலவு 2500 ரூபாவாகக் காணப்படுகிறது. எனவே இன்று 1000 ரூபா நாட் சம்பளம் குறித்து பேசுவது பிரயோசனமற்றது.

எனவே அவர்களது நாளாந்த வருமானத்தை 2500 ரூபா வரை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள நிவாரணங்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment