(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வார காலமாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இன்று வரை 5,357 குடும்பங்களைச் சேர்ந்த 22,338 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
தென் மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை தொடர்ந்தும் காணப்படுவதால் அடிக்கடி மழை பெய்யக் கூடும் என்பதோடு திடீர் வெள்ளம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலும் காணப்படுகிறது. எனவே ஆறுகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கேட்டுக் கொண்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு, மாத்தறை, கேகாலை, கம்பஹா, கண்டி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களே சீரற்ற காலநிலையால் அதிகளவில் பாதிப்பட்டன.
இவற்றில் குறிப்பாக இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிக அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. குறித்த 7 மாவட்டங்களிலுமுள்ள 43 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 பாதுகாப்பு முகாம்களில் 192 குடும்பங்கரளைச் சேர்ந்த 690 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவை தவிர 647 குடும்பங்களைச் சேர்ந்த 2,433 நபர்கள் பாதுகாப்பு கருதி உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட சகல பிரதேச செயலகப்பிரிவுகளையும் சேர்ந்த 5,357 குடும்பங்களைச் சேர்ந்த 22,338 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 174 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரு நலன்புரி நிலையங்களும் , கொழும்பில் ஒரு நலன்புரி நிலையமும், கொலன்னவையில் 4 மற்றும் சீதாவாக்கை பிரதேசத்தில் இரு நலன்புரி முகாம்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
காலி மாவட்டத்தில் தவலம, நெலுவ, நாகொட, பத்தேகம பிரதேச செயலகப் பிரிவுகளிலும், மாத்தளை மாவட்டத்தில் அத்துரலிய, சியம்பலாகொட, கும்புருபிட்டிய, பாணதூகம உள்ளிட்ட பிரதேசங்களிலும், முலட்டிய பிரதேச செயலகப்பிரிவிலும், கொழும்பில் - ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகப்பிரிவில் கடுவலை, வெலிஹிந்தி உள்ளிட்ட பிரதேசங்களிலும் , ஆட்டிகல கிழக்கு, ஹேனபிட்டி, கம்பஹா, களுத்துறையில் மோல்காவ, போவின்ன, மில்லகந்த, கரவெல்ல, இரத்தினபுரியில் அயகம , குருவிட்ட, கேகாலையில் தெஹியோவிட்ட பிரதேசத்திலும் வெள்ள நீர் இன்றும் (நேற்றுமாலை) காணப்படுகிறது.
வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படக் கூடும் என்று இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களில் முப்படையினர் தயார் நிலையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு பாதுகாப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் இதுவரையில் கொரோனா உள்ளிட்ட எவ்வித சுகாதார சிக்கல்களும் பதிவாகவில்லை.
எவ்வாறிருப்பினும் டெங்கு அச்சுறுத்தல் அதிகமாகவே காணப்படுகிறது. எனவே வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர் ஒவ்வொருவரும் தமது வீட்டு சுற்று சூழலை தூய்மைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தென்மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை இன்னும் நிறைவடையவில்லை என்பதால் ஆறுகளுக்கு நீராடச் செல்லல் உள்ளிட்டவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இடி இடிக்கின்ற சந்தர்ப்பங்களில் மின் உபகரண பாவனையை தவிர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் சிறுவர்களை விளையாடுவதற்கும் அனுமதிக்க வேண்டாம் என்றார்.
No comments:
Post a Comment