(நா.தனுஜா)
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் மக்களின் ஆணைக்கும், அவர்களது எதிர்பார்ப்பிற்கும் முற்றிலும் முரணானதாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, புதிய திருத்தத்தை மிகவும் அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்குமேயானால் தமது கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட 21 ஆவது திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் மேற்கண்டவாறு கூறினர்.
அச்சந்திப்பில் முதலாவதாகக் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல கூறியதாவது, தற்போது அரசாங்கம் புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பேசுகின்றது. ஆனால் இப்போது வரை அந்தத் திருத்தத்தை யாரும் காணவில்லை. புதிய திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இன்னமும் யாரும் பார்க்காத, அமைச்சரவையில் அனுமதி பெறப்படாத, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத திருத்தம் தொடர்பிலேயே ஒட்டு மொத்த நாடும் பேசிக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் தயாரிக்கும் 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்வரும் 6 ஆம் திகதி அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், அதனைத் தொடர்ந்து அத்திருத்தத்தை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடல், பாராளுமன்றத்தில் முதலாம் கட்ட வாசிப்பு, பின்னர் சட்ட வரைஞர் திணைக்களத்திடம் சமர்ப்பித்து உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயம் கோரல், அதற்கமைய பாராளுமன்றத்தில் இரண்டாம் கட்ட வாசிப்பை முன்னெடுத்தல் ஆகிய அனைத்து செயன்முறைகளும் முடிவிற்கு வருவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களாகும்.
இதனை அவசரமாக நிறைவேற்ற வேண்டும் என்று அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு அவசரமெனில், ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்ட 21 ஆவது திருத்தம் இருக்கின்றது. அதற்கு எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனவே அதனை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பின்வருமாறு கூறினார்.
பொதுமக்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் பரிந்துரைகளுக்கு அமைவான 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நாம் முன்வைத்ததுடன், பாராளுமன்றத்தில் அதன் மீதான முதலாம் கட்ட வாசிப்பும் இடம்பெற்றது.
அதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தால், அதனைப் பாராளுமன்றத்தின் ஊடாகச் செய்திருக்க முடியும். ஆனால் அதனைவிடுத்து மக்கள் ஆணைக்கு முரணான 21 ஆம் திருத்தத்தை அரசாங்கம் சமர்ப்பித்திருக்கின்றது.
அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 21 ஆவது திருத்தம் மிகவும் பின்னடைவானதாகவே காணப்படுகின்றது.
எனவே இவ்வாறு மக்கள் ஆணைக்குப் புறம்பாக செயற்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment