கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற கட்டுநாயக்க தொழிலாளர் எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்ட ரொஷான் ஷானக்க கோட்டா கோ கமவில் நினைவு கூரப்பட்டார்.
கடந்த 2011 ஆம் அண்டு மே மாதம் 30 ஆம் திகதி அரசாங்கம் தனியார் துறையினருக்கு ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக ஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதற்கு எதிராக நாடு பூராகவும் எதிரப்புக்கள் கிளம்பின.
இந்நிலையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் உச்சக்கட்டம் அடைந்ததோடு அதனைக் கட்டுப்படுத்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ரொஷான் ஷானக்க படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 30 ஆம் திகதியுடன் ரொஷான் ஷானக்க கொல்லப்பட்டு 11 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், கோட்டா கோ கமவில் அவரது மரணத்திற்கு நீதி வேண்டி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ரொஷான் ஷானக்கவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட அமைச்சரவையினர் பதவி விலக வேண்டுமெனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 56 ஆவது நாளாக இரவு பகல் பாராது மழை வெயிலையும் பொருட்படுத்தாது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment