(எம்.ஆர்.எம்.வசீம்)
21 ஆம் திருத்தச் சட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஆதரவளிக்காதவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அத்துடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருக்காவிட்டால் 20 ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்த முடியாமல் போயிருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பைஸல் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே 21ஆம் திருத்தச் சட்டத்திலும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஒரு சில விடயங்களில் சில திருத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவி வகித்தல், ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்தல், போன்ற சில விடயங்களே மாற்றப்பட்டிருக்கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதாக இருந்தால் அதற்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டி ஏற்படுகின்றது. அதனால் இரண்டாம் கட்டமாக அதனை செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அரசியலமைப்பு திருத்தத்துக்கு 10 திருத்தங்களை சமர்ப்பித்திருக்கின்றது. விசேடமாக அதிகாரங்கள் ஒரு இடத்தில் மையப்படாத வகையிலேயே அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் 21ஆம் திருத்தத்துக்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. 21ஆம் திருத்தத்துக்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மக்களின் கருத்தாகும். அதனால் 21ஆம் திருத்தத்துக்கு ஆதரவாளிக்காதவர்களுக்கு மக்கள் அடுத்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அதேபோன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் வீட்டுக்கு செல்லவேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாகும். என்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவி விலகினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தே ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட வாய்ப்பு இருக்கின்றது. அதனால் தற்போதைக்கு அது சரிவராது.
மேலும் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாவிட்டால், அது அனுமதித்திருக்க மாட்டாது. ஆனாலும் 20 மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக 20 மூலம் ஜனாதிபதிக்கு ஏகாதிபத்திய அதிகாரம் கிடைக்கப் பெற்றது.
அதனால்தான் கொவிட் தாெற்றில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி இருந்தும், ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தார். 20 க்கு வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால்கூட அந்த அனுமதியை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.
மேலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது பொதுஜன பெரமுனவுக்கு எண்ணிக்கையிலேயே இருக்கின்றது. அதனால் எதனையும் சாதிக்க முடியாத நிலையே இருக்கின்றது. இன்று மக்களின் ஏகாதிபத்திய அதிகாரமே ஓங்கி இருக்கின்றது.
அதனால்தான் 5 வருடத்துக்கு பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் பதவி விலக வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. சட்டப்பிரச்சினை இல்லாவிட்டால் ஜனாதிபதியும் பதவி விலகி இருப்பார் என்றார்.
No comments:
Post a Comment