பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்களையே தவிர ஜனாதிபதியை அல்ல - ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்களையே தவிர ஜனாதிபதியை அல்ல - ஐக்கிய மக்கள் சக்தி

(நா.தனுஜா)

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் அத்தியாவசியமானது என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் நாம் இப்போது பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்களையே தவிர ஜனாதிபதியை அல்ல என்பதைப் புரிந்துகொண்டு, உரியவாறான திருத்தங்களுடன் கொண்டுவரும் பட்சத்தில் 21 ஆவது திருத்தத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்கத்தயாராக இருக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் சார்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்தியமைக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட அனைத்து ஜனநாயகக் கூறுகளும் 21 ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும். தனியொரு நபரைப் பாதுகாப்பதற்காக ஒட்டு மொத்த நாட்டையும் படுகுழிக்குள் தள்ளுவது ஏன் என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லதொழிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரினதும் கோரிக்கையாக இருக்கின்றது. அதற்கு அமைவாக உரியவாறான திருத்தங்களை மேற்கொண்டு, எதிர்வரும் 2 அல்லது 3 வார காலத்திற்குள் அதனை நிறைவேற்றாவிட்டால், மக்கள் நம்பிக்கையிழக்கும் நிலை உருவாகும்.

எனவே அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் அத்தியாவசியமானது என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. அதனை உரியவாறான திருத்தங்களுடன் கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின்போது ஒருவிதமாக செயற்பட்ட அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தற்போது 21 ஆவது திருத்தத்தில் வேறுவிதமாக செயற்படுகின்றார்.

நாம் இப்போது பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்களையே தவிர ஜனாதிபதியை அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே குறைபாடுகளை நிவர்த்தி செய்து, 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்றே கூறுகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment